மிதிவண்டி மூலம் மேற்கு வங்கத்துக்கு செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்!

 

மிதிவண்டி மூலம் மேற்கு வங்கத்துக்கு செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பணி புரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரயில் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.

மிதிவண்டி மூலம் மேற்கு வங்கத்துக்கு செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்!

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் பணியாற்றி வந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செங்கல்பட்டில் சைக்கிள்களை வாங்கிக் கொண்டு, மேற்கு வங்கம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சொந்த ஊருக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர், அந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், ஆம்பன் புயல் பாதிப்பினால் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த தொழிலாளர்களை தற்போது செங்கல்பட்டில் முகாமில் இருக்கும் தொழிலாளர்களுடன் தங்க வைத்து 2 நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.