7.5% உள் ஒதுக்கீட்டிற்கு இடைக்கால உத்தரவு இல்லை : நீதிபதிகள் திட்டவட்டம்!

 

7.5% உள் ஒதுக்கீட்டிற்கு இடைக்கால உத்தரவு இல்லை : நீதிபதிகள் திட்டவட்டம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணைக்கு ஏற்ப, தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு தனியார் பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி மாணவிகள் மற்றும் கத்தோலிக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

7.5% உள் ஒதுக்கீட்டிற்கு இடைக்கால உத்தரவு இல்லை : நீதிபதிகள் திட்டவட்டம்!

அப்போது, 7.5% இட ஒதுக்கீட்டால் தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, ஏற்கனவே கலந்தாய்வு முடிந்து விட்டதாகவும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், ஒதுக்கீட்டிற்கு எதிராக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்றும் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.