கோவாக்சின் தடுப்பூசியில் கன்றின் ரத்தம் இல்லை!

 

கோவாக்சின் தடுப்பூசியில் கன்றின் ரத்தம் இல்லை!

கோவாக்சின் தடுப்பூசியின் கன்றின் ரத்தம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த தகவல் தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்சின் தயாரிப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது. கன்றின் ரத்தத்தை பயன்படுத்தி கோவாக்சின் தயாரிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு வழிகாட்டுதல்களை ஆய்வு செய்த போது, பிறந்து 20 நாட்களுக்கு கீழ் உள்ள கன்றுகளை கொன்று அதன் உலர் ரத்தத்தில் வைரஸ் கிருமிகள் வளர்க்கப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகவே நாடு முழுவதும் அதிர்ச்சி கிளம்பியது.

கோவாக்சின் தடுப்பூசியில் கன்றின் ரத்தம் இல்லை!

இந்த நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இது தொடர்பான உண்மை நிலையை வெளியிட்டுள்ளது. அதில், “கன்றின் சீரம் வைரஸ் செல்களை வளர்க்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக போவின் போன்ற வேறுவகையான மாட்டின் கன்றுகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரத்தத்தில் வெட்ரோ செல்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் போலியோ, ருபெல்லா மற்றும் இன்ஃபுளுவன்ஸா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

கன்றின் ரத்தத்தில் வளர்க்கப்பட்ட வைரஸ் கிருமிகள் தண்ணீர் மற்றும் ரசாயனம் விட்டு நன்கு கழுவப்படுகின்றன. இந்த செயல் முறையில் கன்றின் ரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அதன் பிறகு கொரோனா வைரஸ் அதில் வளர்த்தெடுக்கப்படுகிறது.

பிறகு அந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக கொல்லப்படுகிறது. இந்த செயல் முறையில் வைரஸ் கொல்லப்படுவதுடன் மீண்டும் ஒரு முறை சுத்தப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. தடுப்பூசி தயாராகும்போது அதில் கன்றின் சீரம் அல்லது ரத்தம் இருக்காது. கோவாக்சின் தடுப்பூசியில் கன்றின் ரத்தம் துளியும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சினில் கன்றின் ரத்தம் இல்லை என்றாலும் தடுப்பூசி தயாரிப்பு பணியில் கன்றின் ரத்தம் பயன்படுத்தப்படுவது உண்மையாகிறது. பிறந்து 20 நாட்களுக்குள்ளான கன்று கொல்லப்படுகிறதா அல்லது ரத்தம் எப்படி பெறப்படுகிறது என்ற தகவலை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்காதது அதிர்வை குறைக்கவில்லை என்பதே உண்மை!