வெப்கேமிரா சிக்னலை வைத்து என்னுடைய கைலாசா நாட்டை கண்டுபிடிக்கலாம் என்பது நடக்காது – நித்யானந்தா சவால்

 

வெப்கேமிரா சிக்னலை வைத்து என்னுடைய கைலாசா நாட்டை கண்டுபிடிக்கலாம் என்பது நடக்காது – நித்யானந்தா சவால்

சுவாமி நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தினந்தோறும் சமூகவலைதளங்களில் நேரலை மூலமாக புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக கைலாசா நாட்டிற்கான நாணயங்கள் மற்றும் பணத்தை விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று பொற்காசுகளை வெளியிட்டார்.

இதனையடுத்து நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி் கோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் நிறுவனரின் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கிய 3 மணி நேரத்தில் நேரலையில் தோன்றிய சுவாமி நித்யானந்தா மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதாஸ் என்ற ஜவுளிகடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கைலாசாவில் தொடங்க முன்னுரிமை அளிக்க சன்னியாசிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், தான் இறந்தபிறகு தனது சொத்தை மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சொத்துக்கு ஆசைபட்டு நான் மதுரை ஆதினத்திற்கு வரவில்லை எனவும் மீனாட்சியம்மன் வாழ்ந்த மதுரையில் உயிரிழக்க வேண்டும் என்பதால் தான் வந்தேன் எனவும், மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்காரர்கள் நான் உயிரோடு இருக்க வேண்டும் என பிராத்தனை செய்துவருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

வெப்கேமிரா சிக்னலை வைத்து என்னுடைய கைலாசா நாட்டை கண்டுபிடிக்கலாம் என்பது நடக்காது – நித்யானந்தா சவால்

அதுமட்டுமின்றி தான் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன் எனக்கூறிய நித்யானந்தா, சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசாவை கண்டுபிடிக்கலாம் என முயற்சிக்க வேண்டாம் அப்படி முடியாத விஷயம் என கூறிக்கொண்டே சிரித்தார். தான் உயிரிழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சியம்மன் கோவிலையும் சுற்றிகொண்டுவந்த பின்னரே புதைக்க வேண்டும் எனவும், கைலாசா நாட்டிற்கு அங்கிகாரம் கிடைத்தவுடன் நிச்சயமாக தொழில் துவங்க வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய பிரஜை ஒருவர் தனி நாடு அறிவித்து நாணயங்கள் மற்றும் பொருளாதார அறிவிப்பை வெளியிட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவரும் நிலையில் தினசரி நேரலையில் தோன்றியும் கூட இந்திய அரசால் ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.