இன்று வருகின்ற ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கிறார்கள். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசிகளில் இதுவே உயர்ந்த ஏகாதசி. இன்றைய தினத்தின் மாலைப் பொழுது முழுவதும் யார் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறார்களோ, அவர்கள் அடுத்து வரும் ஒரு வருஷத்துக்கான ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பலன்களைப் பெறுவார்கள்.

கலியுகம் பிறந்ததும், தர்மபுத்திரன் கலியுகத்தின் கொடுமையைப் பார்த்தார். அவர் பார்த்த இடங்களில் எல்லாம் களவும் சண்டையுமாக இருந்தது. தர்மமே சாய்ந்து விட்டது. பிறர் மனைவியை அபகரித்தல், வீண் சண்டை செய்தல், கொலை, கொள்ளை என்று எல்லாவற்றையும் கண்டார். இதையெல்லாம் பார்த்து, இதில் நாமும் வாசம் செய்ய நேர்ந்து விட்ட தலைவிதியை நினைத்து கலங்கி நின்றார். இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் சுலபமாக இல்லையே எனவும் வருந்தினார்.
அப்போது வியாசரை சந்தித்து, மக்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து மேலே கரையேறுவதற்கான வழியைக் கூற வேண்டுமென பிரார்த்தனைச் செய்தார்.
‘எல்லா பாவங்களையும் அகற்றுவதற்கு ஏகாதசி ஒன்றுதான் சுலபமான வழி. இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றார் வியாசர். அடுத்த நிமிடமே தர்மபுத்திரர், ‘தனது ராஜ்ஜியத்தில் எல்லோரும் ஏகாதசி விரதமிருக்க வேண்டும்" என்று ஆணையிட்டார். அனைவரும் பயந்து உபவாசம் இருக்க முயற்சித்தனர்.

தர்மரின் ஆணையைக் கேட்டு அதிகம் வருந்தியது பீமன் தான். ஏனெனில் பீமனோ வயிறுதாரி. எவ்வளவு உண்டாலும் திருப்திதியடையாதவன். இந்த பிரச்சனையோடு, எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாசமிருக்க முடியும் என்று கலங்கி வியாசரிடம் முறையிட்டான்.
வியாசரும், ‘ஆனி மாதம் வருகின்ற சுக்ல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாசம் இருப்பாயாக’ என்றார். பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாசம் இருந்து பகவானை பூஜித்தான். இப்படி பீமன் இதைக் கடைப்பிடித்து வந்ததால், இந்த ஏகாதசியை பீம ஏகாதசி என்றும் சொல்கிறார்கள்.
இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேத வியாசர் கூறியுள்ளார். பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது தானே. இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் . வருடம்முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன்களும் கிடைக்கும். எம பயமும் நம்மை நெருங்காது.