செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்கு! – விஜயபாஸ்கர் பேட்டி

 

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்கு! – விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா சிகிச்சை பற்றி தவறான தகவலை வெளியிட்ட டி.வி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்கு! – விஜயபாஸ்கர் பேட்டிபிரபல டி.வி செய்திவாசிப்பாளர் வரதராஜன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவருக்கு தெரிந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இடம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. அரசு, தனியார் மருத்துவமனையில் ஒரு பெட் கூட இல்லை. மருத்துவமனையைத் தொடர்புகொண்டால் மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார்கள். எங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என்கிறார்கள். மருத்துவமனை உரிமையாளர், எம்.டி என எல்லோரிடமும் பேசினோம். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. நமக்கு எல்லாம் கொரோனா வராது என்று பெரிய பிரம்மாண்டமான நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். கொஞ்சம் கூட தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள். மிக அவசியம் வெளியே சென்றே ஆக வேண்டும் என்றால் மாஸ்க் அணிந்து எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி செல்லுங்கள்.
அந்த குடும்பம் பட்ட பிரச்னை பாருங்கள், அழுகை வந்துவிட்டது. அதிர்ந்து போய்விட்டேன். இந்த நிலைமை யாருக்காவது வந்தால் எங்கே சென்று அட்மிட் செய்வார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்; அவர் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தனக்குத் தெரிந்தவர் பட்ட பாடு பற்றி வரதராஜன் பேசியிருந்தார். அதிலும் யாரும் வெளியே செல்லாதீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியிருந்தார். வரதராஜன் கருத்து உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல், உடனடியாக வழக்குப் பதிவு செய்வோம் என்று கூறுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போல் உள்ளது.