புதுச்சேரியை அடுத்த மதக்கட்டு மாரியம்மன் வீதியில் வசித்து வந்த சிவா-விஜயலட்சுமி தம்பதியினருக்குக் கடத்த ஏப்ரல் மாதம் திருமணம் ஆகியுள்ளது. சிவா அப்பகுதியில் ஜுஸ் கடை நடத்தி வருகிறார். விஜயலட்சுமி கருவுற்று நான்கு மாதமே ஆகிறது. இந்நிலையில், திடீரென அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து புகை மற்றும் கருகிய வாடை வந்துள்ளது எங்கே இருந்து வருகிறது என அக்கம் பக்கம் வசிப்போர் சோதித்துப் பார்க்கையில் சிவா-விஜயலட்சுமி தம்பதியினர் வீட்டிலிருந்து தான் வருகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

உடனே, தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்துள்ளனர் . அதன் பிறகு, உள்ளே சென்று சோதித்துப் பார்க்கையில் வீட்டிலிருந்த சிலிண்டர் டியூப் கழட்டி விடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், சிவா மற்றும் விஜயலட்சுமி இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். விஜயலட்சுமியின் கழுத்தில் துணி சுற்றப்பட்டு இருந்துள்ளது.

இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் மனைவி தகராற்றில் விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றாரா, அல்லது யாரேனும் இருவர் மரணத்திலும் சம்மந்தப்பட்டுள்ளனரா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.