தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,835 : இன்றைக்கும் 119 பேர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,835 : இன்றைக்கும் 119 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 3,20,355
என்ற கணக்கில் உள்ளது.

சென்னையில் மட்டும் 989 பேருக்கு இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது வாரமாக 1000க்கும் குறைவாகக்
கரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் தமிழகத்தில் நேற்று 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,397 ஆக உள்ளது.

5,146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,61,459 பேர் குணமடைந்துள்ளனர்.

.உலகம் முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 7.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து பிரேசில் நாடு இருக்கிறது. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் கொரோனா
தொற்றின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கையிலும் அந்நாடு முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் பிரேசில்
ஆகிய நாடுகள் உள்ளன. 4வது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்து வந்தது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பின் எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும்
ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் என்று
கூறப்படுகிறது. மொத்த பாதிப்புபில் ஏறக்குறைய 24 லட்சம் எண்ணிக்கையை இந்தியா தொட்டுள்ள நிலையில், உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட
3வது நாடாகவும் இந்தியா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.