தூத்துக்குடி மிகப் பெரிய தொழில் நகரமாக மாறி விட்டதால் அந்த நகரத்தில் நிறைய விமானச் சேவைகள் இயக்கப் பட்டு வருகின்றன. நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் உட்படப் பயணம் செய்வதால், தூத்துக்குடியிலிருந்து முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் புதிய சேவைகளைத் துவங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெங்களூர்- தூத்துக்குடி இடையே விமானச் சேவையை இயக்கி வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த சேவை நிறுத்தப் பட்டது. இதனையடுத்து, தூத்துக்குடி- சென்னை இடையே மூன்று விமானச் சேவைகளை தற்போது இயக்கி வரும் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய ஏர்லைன் நிறுவமான இண்டிகோ விமான நிறுவனம் பெங்களூர்- தூத்துக்குடி வரை புதிய சேவைகளை வரும் 27 ஆம் தேதி முதல் துவக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்துக் கூறிய இண்டிகோ நிறுவனம் தரப்பினர், பெங்களூரிலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்படும் விமானம் 7:10 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும், பின்னர் அதே விமானம் காலை 7:50க்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு 9:30க்கு பெங்களூர் சென்றடையும் என்றும், ATR 72 ரக விமானமான இந்த விமானத்தில் ரூ.3,686 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பயணம் மேற்கொள்ளும் பயனாளிகள் கையில் 7 கிலோ வரை சுமை கொண்டுவரலாம் என்றும் செக் இன் சுமை 15 கிலோ வரை இருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சுமையை விட அதிகமாகக் கொண்டு வருபவர்களுக்கு அதற்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளது.