ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ… டிரைவரின் வாழ்வில் விளக்கேற்றிய மு.க.ஸ்டாலின்

 

ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ… டிரைவரின் வாழ்வில் விளக்கேற்றிய மு.க.ஸ்டாலின்

இன்ஸுரன்ஸ் கட்ட பணம் இல்லாததால் தனது ஆட்டோவை எரித்த டிரைவருக்கு புது ஆட்டோவை வாங்கிக் கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாண்டமுத்து, சென்னை அயனாவரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். கொரோனாவால் தாண்டமுத்து வருவாயை இழந்தார். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக குறைக்கப்பட்டதால் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார்.

இந்த நிலையில், ஆட்டோவின் பர்மிட், உரிமம் நீட்டிப்பதற்கு அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தாண்டமுத்து வந்துள்ளார். அப்போது ஆட்டோவை ஆர்.ஐ ஆய்வு செய்ததோடு, ஆட்டோவின் இன்ஸுரன்ஸ் கடந்த 27-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது என்றும் அதை புதுப்பித்துக்கொண்டு வருமாறும் கூறியுள்ளார்

கொரோனா ஊரடங்கால் வருவாயை இழந்த தாண்டமுத்து, ஆட்டோவுக்கு இன்ஸூரன்ஸ் கட்ட பணம் இல்லை. ஆட்டோவை எஃப்.சி (FC) செய்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், எஃப்.சி செய்ய ஆர்.ஐ மறுத்துவிட்டார். இதனால் வேதனை அடைந்த தாண்டமுத்து ஆட்டோவை நடு ரோட்டில் வைத்து ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதோடு, தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இந்த செய்தி தீயாய் பரவியது. இதனை அறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரைச் சந்தித்து புதிய ஆட்டோ ஒன்றை வாங்கிக்கொள்ள நிதியுதவி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிதியுதவி மூலம் புதிய ஆட்டோ ஒன்று வாங்கப்பட்டு, அதன் சாவியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தாண்டமுத்துவிடம் ஒப்படைத்தார். அப்போது, மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து, “எனது ஆட்டோவை தீயிட்டு எரித்த செய்தியை கேட்டு, எனது நிலையை அறிந்து, உடனடியாக நிதியுதவி அளித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆட்டோவை இன்று என்னிடம் ஒப்படைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.