தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் தான். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,974 கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 7 பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகியவை இருந்து வந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களும் சேர்ந்துள்ளது. அம்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அவை தற்போது சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி திருநெல்வேலியில் 464 பேரும் மதுரையில் 426 பேரும் தூத்துக்குடியில் 308 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.