’50 மாதங்களாச்சு… நீட் தேர்வு வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை’ மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

 

’50 மாதங்களாச்சு… நீட் தேர்வு வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை’ மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

தமிழகத்தில் ஓரிரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைபாட்டில் உள்ளன. ஆனாலும், தமிழகத்தில் வலுகட்டாயமாக நீட் தேர்வு நுழைக்கப்பட்டது. அதற்கு காரணமாக நீதிமன்ற தீர்ப்பை முன்நிறுத்தினர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான ஒரு வழக்கு கடந்த 50 மாதங்களாக விசாரணை தொடங்கவே இல்லை என ஆதங்கத்தோடு கூறியிருக்கிறார் பாமக நிறுவனத்தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ்.‌

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பானுமதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவரையும் சேர்த்து நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வில் இடம் பெற்றிருந்த 5 நீதிபதிகளும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், நீட்டுக்கு எதிரான முதன்மை வழக்கின் விசாரணை 50 மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை. இது பெரும் அநீதி.

’50 மாதங்களாச்சு… நீட் தேர்வு வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை’ மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

இந்தியாவில் நீட் தேர்வு 2016-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப் பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நடத்தப்படவுள்ளது. கடந்த 4 ஆண்டு கால நீட் தேர்வின் அனுபவத்தில், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கோ, மருத்துவக் கல்வி வணிக மயமாக்கப்படுவதை தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதை நிரூபிப்பதற்கு ஏராளமான ஆதாரங்களையும், புள்ளிவிவரங்களையும் காட்ட முடியும். இவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்பட்டு விடும். அதன் காரணமாகவே நீட் குறித்த முதன்மை வழக்கு விசாரணை வராமல் தடுக்கப்பட்டு வருகிறது.

2011-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு 2012 முதல் நடத்தப்படுவதாக இருந்தது; பின் 2013-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்று 18.07.2013 அன்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக 11.4.2016 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி தான் இப்போது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

’50 மாதங்களாச்சு… நீட் தேர்வு வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை’ மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை ரத்து செய்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்டது அல்ல. அது முழுமையான தீர்ப்பும் அல்ல. அத்தீர்ப்பு வெறும் 4 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதில் வழக்கு விவரங்கள் குறித்த பத்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் வெறும் 4 வரிகள் மட்டுமே இருக்கும். அதிலும் கூட நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை ரத்து செய்ததற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. அதை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வே ஒப்புக்கொண்டது. நீட் தேர்வு செல்லுமா, செல்லாதா? என்பதை தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கவில்லை என்றும், அதை தீர்மானிப்பதற்காக நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அதன்பின் 51 மாதங்களாகி விட்டன. ஆனால், இன்று வரை நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெற்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஆனால், அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே சிக்ரி, ஆர்.கே.அக்ரவால், ஏ.கே.கோயல், ஆகிய நான்கு நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஐந்தாவது நீதிபதியான ஆர்.பானுமதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஆனால், இதுவரை முதன்மை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

’50 மாதங்களாச்சு… நீட் தேர்வு வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை’ மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

முதன்மை வழக்கு விசாரணைக்கு வந்தால், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, மருத்துவக் கல்வியில் வணிகமயத்தை எப்படியெல்லாம் ஊக்குவிக்கிறது; நீட் தேர்வுக்கான பயிற்சி எப்படி ஆண்டுக்கு ரூ.18,000 கோடி கொட்டும் வணிகமாக மாறியிருக்கிறது என்பதையெல்லாம் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதுமட்டுமின்றி, 8.3.2016 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத் துறைக்கான நிலைக்குழு அறிக்கையின் 5.26-வது பத்தியில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதற்கெல்லாம் மேலாக, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நான்கரை ஆண்டுகளாக நிலுவையில் வைத்துக் கொண்டு, நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல; சமூக நீதியுமல்ல. எனவே, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக புதிய அரசியலமைப்பு சட்ட அமர்வை அமைக்க வேண்டும்; விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.