நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

 

நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலைமகள், அலைமகள், கலைமகள் என்று துர்க்கை வீரத்தை (தைரியத்தை) அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி (அறிவு) கல்விக் கடவுளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

அம்பிகை அருளைப் பெற்ற அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும் அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுள் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது.

அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை இருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாள் காலை பிரதமை இல்லாமல் இருந்தால் முதல் நாளிலே விரதம் கொள்ளல் வேண்டும். பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

விரதம் மேற்கொள்பவர்கள் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம். தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும். இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று சொல்லப்படுகின்றது.

நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் முறை!

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும். ஓன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வளவு, தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குரிய நாட்களை தெளிவு செய்த பின்னர் மற்ற நாட்களை துர்க்கைக்கும் லட்சுமிக்கும் பிரித்துக் கொண்டு விரதங்களை கடைபிடிக்க வேண்டும்.