நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட தயார்! நமச்சிவாயம் சவால்

 

நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட தயார்! நமச்சிவாயம் சவால்

கடந்த 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்ற பின், அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதுடன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் பிறகு இந்த பதவியும் ஓராண்டுக்கு முன்பு பறிக்கப்பட்டது. இதனால் இத்தனை ஆண்டுகளாக அதிருப்தி அடைந்த நமச்சிவாயம், பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதனால் அவர் கடந்த 25 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அனைவருக்கும் அதிர்ச்சிக்கொடுக்கும் விதமாக 27 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட தயார்! நமச்சிவாயம் சவால்

இந்நிலையில் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலத்தில் நடந்த விழாவில் பேசிய நமச்சிவாயம், “நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட தயார். பாஜகவில் இணைந்துள்ளது ஒரு தொடக்கம் தான். முடிவல்ல இது ஆரம்பம் எங்களைப்போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பல பேர் பாஜகவில் இணைந்து கொள்ள தயாராக உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இதுவே எங்களின் தாரக மந்திரம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுத்துள்ளது, சுற்றுலாத்துறைக்கு ரூ.250 கோடி மத்திய அரசு நிதி புதுவைக்கு வந்துள்ளது. ஆனால் தவறான தகவலை கூறி மக்களை ஏமாற்றுவதே முதலமைச்சர் நாராயணசாமியின் தொழிலாக உள்ளது. 85% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என கூறும் முதல்வர் ஏதாவது ஒன்றை விரல்விட்டு கூறமுடியுமா? புதுச்சேரியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக போராட்ட களமாக மாற்றியது தான் நாராயணசாமியின் சாதனை” எனக் குற்றஞ்சாட்டினார்.