முருகனை விடுதலை செய்யத் தீர்மானம்… வாட்ஸ்அப் காலில் பேசத் தடை… ஏன் இந்த முரண்பாடு? – உயர் நீதிமன்றம் கேள்வி

 

முருகனை விடுதலை செய்யத் தீர்மானம்… வாட்ஸ்அப் காலில் பேசத் தடை… ஏன் இந்த முரண்பாடு? – உயர் நீதிமன்றம் கேள்வி

நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முருகன் மற்றம் நளினி அவர்களுடைய உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள். இவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அவர் முடிவெடுக்காமல் உள்ளார். விடுதலை செய்ய அனுப்பப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஊரடங்கு காரணமாக சிறையில் உள்ளவர்களை உறவினர்கள் சந்திக்க தற்போது தடை உள்ளது. இந்த நிலையில் சிறையில் உள்ள முருகன், தன்னுடைய உறவினர்களுடன் வாட்ஸ்அப் காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நளினி, முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும்” எனவும் கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், “இந்தியாவுக்குள் உறவினர்கள், நண்பர்களுடன் பேச அனுமதிக்கத் தயார். வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது. வெளிநாட்டில் லேண்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் வேறு மொழியில் பேசினால் எங்களால் தெரிந்துகொள்ள முடியாது” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “நளினி, முருகன் தமிழர்கள்தானே? சட்டமன்றத்தில் ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக நாளை (ஜூன் 3) பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.