ஜீவசமாதி அடைய உண்ணாவிரதம் இருக்கும் முருகன்! – வேலூர் சிறையில் பரபரப்பு

 

ஜீவசமாதி அடைய உண்ணாவிரதம் இருக்கும் முருகன்! – வேலூர் சிறையில் பரபரப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற வேலூர் சிறையில் உள்ள முருகன், தான் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறி உண்ணாவிரதம் இருப்பதாகவும் அதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களுள் ஒருவர் முருகன். சமீபத்தில் இவரது தந்தை இலங்கையில் காலமானார். தந்தையின் இறுதிச் சடங்கை வாட்ஸ் அப் காலில் பார்க்க அனுமதி கேட்டார். ஆனால் அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துவிட்டது. தன்னுடைய தாயிடம் பேச அனுமதி கேட்டபோது, அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜீவசமாதி அடைய உண்ணாவிரதம் இருக்கும் முருகன்! – வேலூர் சிறையில் பரபரப்பு
இந்த நிலையில் முருகன் ஜீவ சமாதி அடைய கடந்த 11 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த 1ம் தேதி தன்னுடைய உண்ணாநிலையை முருகன் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மருத்துவமனையில் வைத்து முருகனுக்கு குளுக்கோஸ் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. முருகனின் உயிரைக் காப்பாற்ற சிறைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு உட்கொள்ளும்படி முருகனிடம் சிறைத்துறை சார்பில் வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எதையும் ஏற்க மறுத்து ஜீவசமாதி அடையும் முடிவில் உறுதியாக இருப்பதாக முருகன் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் கைதி ஒருவர் மரணம் அடைந்தால் அது பிரச்னையாக மாறும். அதிலும் குறிப்பாக ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதி உயிரிழந்தால் பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது.