தருமபுரி தொப்பூர் விபத்து : உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

 

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

தொப்பூர் விபத்தில் உண்மையான குற்றவாளிகள் எல்&டி நிறுவனத்தின் பொறியாளர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளும் தான் என்று முன்னாள் பாமக எம்பி செந்தில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயின் அருகில் ஏற்பட்ட பயங்கர லாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 15 வாகனங்கள் சேதமடைந்தன. விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

இந்நிலையில் முன்னாள் பாமக எம்பியும் மருத்துவருமான செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொப்பூர் கணவாயில் மீண்டும் ஒரு கோர விபத்து நடைபெற்றிருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த சரக்குந்து மோதி 14 மகிழுந்துகள் சேதப்பட்டிருக்கின்றன. இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விபத்தை ஏற்படுத்திய சரக்குந்தின் ஓட்டுநர் தொப்பூர் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்திருக்கின்றனர் என்பது செய்தி. ஆனால் உண்மையான குற்றவாளிகள் எந்தத் தண்டனையும் இன்றி எப்போதும்போல அவர்கள் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

தொப்பூர் கணவாயில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய தினமும் ஒரு விபத்து நடைபெறுகின்றது. யாராவது இறக்கும் போது மட்டுமே அது செய்தியாகிறது. உயிர் சேதம் ஏற்படாமல், பெரிய காயங்கள் ஏற்படாமல் நடக்கின்ற விபத்துகள் ஏராளம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஏழு ஆண்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விகளுக்கு தொப்பூர் காவல் நிலையமும், எல் &டி நிர்வாகமும் அளித்த பதில்களிலிருந்து ஒரு மாதத்துக்கு இரண்டு பேர் இறந்து போனதை அறிய முடிந்தது.

இந்த விபத்துகளுக்கான காரணமென்ன? இவற்றைத் தடுப்பதற்கு நிர்வாகம் செய்திருக்கும் முன்னெடுப்புகள் என்ன? என்ற கேள்விகளுக்கு எல்&டி நிறுவனம் பின்வரும் பதில்களை அளித்திருந்தது:

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!
  1. சாலையின் ஓரங்களையும், நடுப்பகுதியையும் தெளிவாகக் காட்டுவதற்காக ஒளிரும் பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
  2. ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடி வருகிறோம்.
  3. உலக சுகாதார நிறுவனம் வகுத்தளித்த “பத்தாண்டுகளுக்கான சாலை பாதுகாப்புத் திட்டம் 2011 – 2020” இல் கூறப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம்.
  4. சென்னை, கரக்பூர் ஐஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு விபத்துக்களைத் தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கான சிறப்புத் திட்டங்களை திட்டமிடுகிறோம்.

இந்த முன்னெடுப்புகளில் விபத்துகள் நடப்பதற்கான காரணத்தை முழு மனதோடு ஆய்வு செய்ததற்கான சான்றையும், அவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்கான முழுமையான ஈடுபாட்டையும் காண முடியவில்லை.

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

இந்த பதில்கள் எனக்கு நிறைவாக இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தொப்பூர் கணவாயில் உள்ள இந்த குறிப்பிட்ட இடத்தில், பெங்களூர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் 161.1 – 161.4 கிலோமீட்டர்களுக்கு இடையில் உள்ள இந்த 300 மீட்டரில் எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் பாலு நடத்திய அந்த வழக்கினை அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு சஞ்சய் கிஷான் கவுல் விசாரித்தார். வழக்கு நடைபெற்ற அன்று நான் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தேன்.

இந்த குறிப்பிட்ட இடத்தில் அதிகமான விபத்துகள் நடப்பதற்கான முதன்மைக் காரணம் சாலையின் அமைப்பே என்ற என்னுடைய வாதத்தை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி அவர்கள், சாலை அமைப்பினை முழுமையாக ஆய்வு செய்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் சாலையை மாற்றியமைப்பதற்கான திட்டத்தை ஆறு மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இன்றுவரை, சாலை அமைப்பை மாற்றி அமைப்பதற்கான எந்த முயற்சியையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், எல்&டி நிறுவனமும் எடுக்கவில்லை.

நீதிமன்றத்தில் எல்&டி நிறுவனம் தாக்கல் செய்த பதிலில் ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் செல்வதாலேயே விபத்துகள் ஏற்படுவதாக கூறியிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிக எடையுள்ள சுமைகளை சரக்குந்துகள் சுமப்பதனால் தான் அந்த வளைவில் வண்டியை நிறுத்த முடியாமல் போய்விடுகின்றது என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. பெரும்பாலான சரக்குந்துகள், ஏன் எல்லா சரக்குந்துகளுமே அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமான எடையுள்ள சுமைகளைதான் எடுத்துச் செல்கின்றன.

தருமபுரி தொப்பூர் விபத்து :  உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? முன்னாள் பாமக எம்பி செந்தில் வெளியிட்ட தகவல்!

இந்திய நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சினை, விதிகள் கருப்பு வெள்ளை எழுத்துகளாக மட்டுமே இருக்கின்றன என்பதுதான். இந்திய குடிமகன் விதிகளை மதித்து நடக்காமல் இருப்பதற்கான காரணம் அவன் மரபணு ரீதியாகவே கெட்டவன் என்பதல்ல. ஒரு மனிதன் விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றால் அந்த அமைப்பு அவன் அதனை 100% கடைப்பிடிக்க ஏதுவாக இருக்க வேண்டும். சான்றாக இந்தியாவில் கட்டப்பட்ட எந்த தனியார் கட்டடமும் நான், மீண்டும் சொல்லுகிறேன் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஒரேயொரு தனியார் கட்டடம்கூட அரசு வகுத்த விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்காது. அதற்குக் காரணம் அந்த விதிகள் செயல்படுத்தக் கூடியவையா இருப்பதில்லை என்பதும் அவை ஒவ்வொரு கட்டடத்தின் தேவைக்கும் ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியாததாகவும் இருப்பதுதான்.

தொப்பூர் கணவாயில் உள்ள சாலையை அமைக்கும்போது சரக்குந்துகள் சட்டப்படி சுமந்து செல்ல வேண்டிய சுமையை மட்டுமே சுமந்து செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் சாலையை அமைப்பதே தவறு ஆகும்.

பேருந்துகளிலுள்ள நாற்காலிகளில் கைப்பிடிகள் இருந்தால் அவை 15 கிலோ எடையைத் தாங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்திய தொடர்வண்டிகளில் உள்ள கைப்பிடிகள் 80 கிலோ எடையைத் தாங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். இந்திய குடிமக்கள் ரயில்களில் உள்ள கைப்பிடிகளிலும் அமர்ந்து பயணம் செய்வார்கள் என்பதை ரயில்வே உணர்ந்திருக்கிறது. அதனால் எடையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப் படுகின்றன. அதேபோல, ரயில்களில் உள்ள இருக்கைகள், அவை மூன்று பேருக்கான இருக்கைகளாக இருந்தாலும் பத்துபேர் அமர்ந்தாலும் தாங்கக் கூடியவைகளாக அமைக்கப்படுகின்றன. பத்து பேர் அமர்ந்து அந்த இருக்கை உடைந்துவிட்டால் அவ்வாறு அமர்ந்தது தவறு என்று வீண் வாதம் செய்ய தொடர்வண்டித்துறை தயாராக இல்லை. மாறாக, அது இந்திய ரயில் பயணிகளின் நடத்தைகளை ஆய்வுசெய்து அதற்கேற்ற வண்ணம் தொடர்வண்டிப் பெட்டிகளின் இருக்கைகளையும் மற்றவற்றையும் அமைத்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இதுபோன்ற புரிதலைப் பெற வேண்டும். காகிதங்களில் உள்ள சட்டங்களை மறந்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் சரக்குந்துகள் எவ்வளவு எடையோடு செல்கின்றன என்பதை கள ஆய்வு செய்து, அதனடிப்படையில், சட்டத்துக்குப் புறம்பாக அதிக எடையோடு செல்கின்ற வாகனங்களுக்குக் கூட தொப்பூர் கணவாயில் பயணிக்கும்போது விபத்து ஏற்படாத வண்ணம் சாலையின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இந்த இடத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான அறிவிப்பு பலகைகள் இல்லை. வாகன ஓட்டிகளால் வேகத்தை குறைக்க முடியாமல் போவதற்கான காரணம் சாலையின் அமைப்புதானே அன்றி அவர்களுடைய திறமையின்மை அல்ல.

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் ஓடும் நெடுஞ்சாலைகளில் ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏறக்குறைய தினமும் விபத்து நடக்கிறது என்றால் அதற்கான காரணம் அந்த இடத்தின் சாலை அமைப்புதான்.

சாலை விபத்துகளுக்குக்கான முதன்மைக் காரணம் ஓட்டுநர்களின் தவறு என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. இது மிகவும் தவறான அணுகுமுறை மட்டுமல்ல. ஆணையம் தன்னுடைய தவறையும், பொறுப்பையும் உணரவில்லை என்பதையே காட்டுகிறது. இந்திய சாலைகளுடைய அமைப்பு, வளர்ந்த நாடுகளின் சாலை அமைப்போடு ஒப்பிடும்போது மிகமிக ஆபத்தாகவும், முறையற்றதாகவும் இருக்கின்றது என்பதை இனிய உதயம் இதழில் எழுதிய கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். இந்த சிறிய கட்டுரையில் அதற்கு இடமில்லை.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், எல்எ&டி நிறுவனமும் இனி தொப்பூர் கணவாயில் உள்ள அந்த குறிப்பிட்ட ஆபத்தான வளைவில் ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு சாலை அமைப்பை மாற்றுவதற்கு திட்டமிட வேண்டும். அதிக எடையோடு வரும் சரக்குந்து ஓட்டுநர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதை எல்&டி நிறுவனம்‌ உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஓட்டுநர்களை குற்றவாளிகளாகக் காட்டுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.‌ உண்மையான குற்றவாளிகள் எல்&டி நிறுவனத்தின் பொறியாளர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளும் தான்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.