“ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாயகன்”

 

“ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாயகன்”

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திடலில் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, “எந்த எதிர்ப்பு வந்தாலும் உதய சூரியன் உச்சிக்கு வரும். அப்படி வரும் போது எல்லா பகையையும் எரித்து விடும். உதய சூரியன் உதயமாகும் போது தமிழகத்தில் உள்ள இருட்டு நீங்கி வெளிச்சம் வரும். ஜல்லிக்கட்டு போட்டியில் 8 மாடுகளை அடக்கிய வீரருக்கு தங்க காசு என கூறி போலி தங்கத்தை கொடுத்த இழிவான செயலை செய்த பெரிய மனிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதே போல் தான் போலியான ஆட்சியை அவர் தமிழகத்தில் நடத்தி வருகிறார். விளம்பரம் செய்ய கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால் மக்களுக்கு உதவி செய்ய பணம் இல்லை என அரசு கூறுகிறது. அரசு பணத்தை எடுத்து பத்திரிகையில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எல்லா விதத்திலும் தமிழகம் வீழ்ச்சி பாதையில் செல்கிறது.

“ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாயகன்”

தலைவர் ஸ்டாலினை அறிக்கை நாயகன் என கூறி வருகிறார்கள் ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் அடிக்கல் நாயகனாக அறிவிப்பு மட்டுமே கொடுத்து கொண்டு செல்கிறார். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. குமரி மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவினரை காப்பாற்ற தான் அரசு முனைப்பு காண்பித்தது. மழையால் பாதித்த விவசாயிகள் அழுகுரலை கேட்க கூட ஆட்சியாளர் தயாராக இல்லை. இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் நாங்கள்தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இரண்டு சதவீதம் இருக்கும் இந்து மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கிறார்கள். பெரும்பான்மையான இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே தலைவர் கலைஞர். அவருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் தான். தமிழால் தமிழர்களால் ஒன்றிணைக்கப்பட்டு உள்ள இயக்கம் திமுக, எந்த சூழ்ச்சி செய்தாலும் எங்களை பிரிக்க முடியாது” எனக் கூறினார்.