மலையில்தான் இன்டர்நெட் கிடைக்கும்… தினமும் ஒரு மைல் தூரம் நடக்கும் மாணவர்கள்… ஆன்லைன் வகுப்பால் நடக்கும் பரிதாபங்கள்

 

மலையில்தான் இன்டர்நெட் கிடைக்கும்… தினமும் ஒரு மைல் தூரம் நடக்கும் மாணவர்கள்… ஆன்லைன் வகுப்பால் நடக்கும் பரிதாபங்கள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்டர்நெட் கிடைப்பதற்காக தினமும் ஒரு மைல் தூரம் மலை மீது ஏறிச்சென்று படிக்கின்றனர் பழங்குடியின மாணவர்கள். இவர்களின் ஆபத்தான பயணத்தை தடுக்க கூடுதல் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் 17ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்று நினைத்தபோது, அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் வகுப்புக்கு தனியார்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்தது தனியார் பள்ளிகள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படவில்லை. இதனால் எழுந்த விமர்சனத்துக்கு தமிழக அரசு, கல்வித் தொலைக்காட்சி டிவியை ஆரம்பித்தது.

இதன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் என்பது கல்வி கட்டணம் வசூலிக்கும் தந்திரம் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பல மாணவர்களுக்கு செல்போன் இல்லாத நிலையில் இருக்கிறது. கொரோனாவால் வருமானத்தை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு சுமையான அமைந்தது. பல பெற்றோர்கள் கடன் வாங்கி பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மனஉளைச்சலால் 10ம் வகுப்பு மாணவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்டர்நெட் கிடைப்பதற்காக தினமும் ஒரு மைல் தூரம் மலை மீது ஏறிச்சென்று படிக்கின்றனர் பழங்குடியின மாணவர்கள். திருச்சி மாவட்டம் பச்சமலையில் உள்ள மணலோடை கிராமத்தில்தான் இந்த பரிதாப நிலை. இந்த மலையில் உள்ள ஒரு குகைதான் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கிறதாம். இதனால் இந்த மலையைச் சுற்றியுள்ள மேலூர், தாளூர், சின்ன இலுப்பூர், தோனூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மலை மீது ஏறிச்சென்று படித்து வருகின்றனர். பள்ளிகளில் இருந்து பாடப்புத்தம், கேள்வி, பதில்கள், ஆடியோ, வீடியோ உள்ளிட்டவைகளை வாட்ஸ் அப்களில் அனுப்பப்படுகிறது. இதனை டவுன்லோடு செய்வதற்கு பிளஸ் 2 மாணவர்கள் இந்த மலைகளுக்கு செல்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், “பச்சமலையை சுற்றி 32 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதற்கு பி.எஸ்.என்.எல் டவர் ஒன்று மட்டும் உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எந்த சிக்னலும் கிடைக்காது. இந்த கிராமங்களை அரசு கண்டு கொள்வதோ கிடையாது. தினந்தோறும் மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். உடனடியாக இந்த கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.