2,000 ரூபாய்க்காக அம்மாவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன்கள்!- போதையால் நடந்த விபரீதம்

 

2,000 ரூபாய்க்காக அம்மாவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன்கள்!- போதையால் நடந்த விபரீதம்

2 ஆயிரம் பணத்துக்காக குடிபோதையில் பெற்ற அம்மாவை அடித்துக் கொன்ற மகன்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்த கணேசன் – சரோஜா தம்பதிக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். தந்தை கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை தேடியுள்ளனர். பணம் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து எனது அம்மாவிடம் இரண்டு பேரும் கேட்டுள்ளனர். வீட்டு செலவுக்கு பணத்தை செலவு செய்துவிட்டேன் என்று சரோஜா கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் இரும்பு கம்பியால் அம்மாவை கடுமையாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் அலறிய சரோஜாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடு வந்தனர். இதனை பார்த்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் சரோஜாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றனர். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணை நடத்தி வந்த காவல்துறையினருக்கு சூரம்பட்டிவலசு சுடுகாடு பகுதியில் இரண்டு பேர் நின்றுகொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மகன்கள் இரண்டு பேரும் தாக்கியதில் சரோஜா உயிரிழந்ததால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து சரோஜாவின் உடலை தோண்டி எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி முன்னிலையில் நேற்று மாலை உடலை தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு செலவுக்கு பணத்தை எடுத்து செலவழித்த அம்மாவை மகன்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.