காய்ச்சல் இல்லை என்றாலும் கொரோனாவாக இருக்கலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

 

காய்ச்சல் இல்லை என்றாலும் கொரோனாவாக இருக்கலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியா முழுக்க 2ம் அலை கொரோனா பரவல் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் கொரோனா காய்ச்சல் இல்லாமல் கூட தன்னுடைய வேலையைக் காட்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் அலை தொற்றின்போது பெரியவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள், இளைஞர்களுக்கு தொற்று இருந்தாலும் பெரிய சிக்கல் ஏற்படவில்லை. தற்போது, குழந்தைகளைக் கூட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வைரஸ் கிருமி தீவிரமாக உள்ளது. அதாவது எல்லா வயதினரையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை.

காய்ச்சல் இல்லை என்றாலும் கொரோனாவாக இருக்கலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் கவுரி அகர்வால் என்பவர் கூறுகையில், “வயதானவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவிலான இளம் வயதினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இவர்களில் பலருக்கும் காய்ச்சல் கூட இல்லை. ஆனால், வாய் உலர்தல், வயிறு செரிமான பிரச்னை, வாந்தி, வயிற்றுப்போக்கு, கண்கள் சிவத்தல், தலைவலி போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கொரோனா பரிசோதனை செய்வதில் ஆய்வகங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆய்வகம், கட்டமைப்பு வசதி என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆய்வு பற்றி 24 மணி நேரத்தில் ஐசிஎம்ஆர்-ல் பதிவு செய்வதில்தான் பிரச்னை உள்ளது” என்றார்.

வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எட்டு மாதம் முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது.

பலருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இல்லாமலேயே பாதிப்பு தீவிரமாகிறது. எனவே, குழந்தைகளின் உடல் நலனில் கவனக் குறைவு வேண்டாம். வீட்டில் ஒரு தெர்மோமீட்டர், ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஆக்சிஜன் அளவு அபாயத்தை எட்டுவதற்கு முன்பு சிகிச்சை பெற இது உதவும்.

அனைத்துக்கும் மேலாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொது சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவுவது, வெளியே மாஸ்க் அணிந்து செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்!