இரு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி – இருவர் கைது!

 

இரு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி – இருவர் கைது!

கன்னியாகுமரி

குமரி அருகே இரு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கஞ்சிக்குழியை சேர்ந்தவர் ஜெபமணி. ஜெராக்ஸ் கடை உரிமையாளர். சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் அறிமுகமான பாளையங்கட்டியை சேர்ந்த மணிகண்டன் (40), வெள்ளாங்கோட்டை சேர்ந்த ஜான் (38) ஆகியோர், கொடுக்கும் பணத்திற்கு இரு மடங்கு ஹவாலா பணத்தை வழங்குவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஜெபமணி, கடந்த பிப்ரவரி 4ஆம் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 18 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், போலீசார் வருவதாக கூறி 3 பேரையும் தப்பியோட செய்துள்ளனர். பின்னர், மீண்டும் ஜெபமணியை தொடர்பு கொண்டு மேலும், 40 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி பணம் தருவதாக கூறியுள்ளனர்.

இரு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி – இருவர் கைது!

அவர்கள் மீது சந்தேகமடைந்த ஜெபமணி, இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீஸ் ஆலோசனைப்படி, மார்த்தாண்டம் சாங்கை பகுதியில் அந்த கும்பலிடம் ஜெபமணி பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன், ஜானை மடக்கி பிடித்தனர். மேலும், மோசடி கும்பலை சேர்ந்த 4 பேர் தப்பியோடினர்.

பிடிபட்டவர்களிடம் இருந்த சாக்கு மூட்டை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது, அதில் வெள்ளை தாளை அடுக்கி வைத்து, அதன் மீது 500 ரூபாய் கட்டுகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.