நடமாடும் எம்ஐ ஸ்டோர் – சியோமி தொடக்கம்!- கிராமங்களுக்கும் பொருட்கள் விற்பனை செய்ய திட்டம்

 

நடமாடும் எம்ஐ ஸ்டோர் – சியோமி தொடக்கம்!- கிராமங்களுக்கும் பொருட்கள் விற்பனை செய்ய திட்டம்

நாடெங்கிலும் சிறிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக நடமாடும் கடையை சியோமி நிறுவனம் தொடங்கி உள்ளது.

”எம்ஐ ஸ்டோர் ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நடமாடும் கடையின் மூலம், வாடிக்கையாளர்கள் சியோமி நிறுவனத்தின் பொருட்களை, தங்கள் பகுதியிலேயே வாங்கிக்கொள்ளலாம். குறிப்பாக தற்போதைய தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு சூழலில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு சிலர் தயக்கம் காட்டுவதால் இந்த புதிய முயற்சியை சியோமி எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் தனது பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நடமாடும் எம்ஐ ஸ்டோர் – சியோமி தொடக்கம்!- கிராமங்களுக்கும் பொருட்கள் விற்பனை செய்ய திட்டம்

இந்த நடமாடும் கடையில், எம்ஐ பிராண்டின் அனைத்து செல்போன்கள் தவிர, எம்ஐ ஸ்மார்ட் டிவிக்கள், எம்ஐ 4கே பாக்ஸ், எம்ஐ டிவி ஸ்டிக், வயர்லெஸ் மற்றும் புளூடூத் இயர்போன்கள் என அந்நிறுவனத்தின் சகல பொருட்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கடை, தொடக்க கட்டமாக எந்த நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்து சியோமி தகவல் தெரிவிக்கவில்லை. எனினும் விரைவில் நாட்டின் பல பகுதிகளில் இந்த நடமாடும் கடையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

-எஸ். முத்துக்குமார்