‘பெட்ரோல் விலை ஏறிபோச்சு’ – சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ!

 

‘பெட்ரோல் விலை ஏறிபோச்சு’ – சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ!

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விண்ணைப் பொளக்கிறது. குறிப்பாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை சதத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது. இதனால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவருகிறது. நடுத்தர வர்க்கத்தினரே விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களும், எதிர்க்கட்சிகளும் கொந்தளித்தும் கிஞ்சித்தும் காதில் போட்டுக்கொள்ளாமல் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

‘பெட்ரோல் விலை ஏறிபோச்சு’ – சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ!

இதனால் நாடு முழுவதும் ஆங்காங்கே நூதன முறையில் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக, இயல்பு வாழ்க்கையிலேயே அந்த நூதனைத்தை நுழைத்து போராட்ட உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கரூரில் செந்தில்பாலாஜி மாட்டு வண்டி ஓட்டிவந்து ஆர்ப்பாட்டத்தில் முழங்கினார். அந்த வகையில் தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி சைக்கிளில் வந்தார்.

பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டிக்கும் விதமாக சைக்கிளில் வந்த அவர், மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிஏஏ விவகாரம், பாஜகவுடன் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறார் தமிமுன் அன்சாரி. இதனால் இந்தச் சட்டப்பேரவையில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.