நாங்கள் செய்யும் பணிகளில் கடுகளவும் உள்நோக்கம் இல்லை – ஆர்.பி.உதயகுமார்

 

நாங்கள் செய்யும் பணிகளில் கடுகளவும் உள்நோக்கம் இல்லை – ஆர்.பி.உதயகுமார்

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் களமிறங்கி மக்களுக்கு உதவ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதன் படி, எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருமங்கலம் தொகுதியில் உள்ள மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர் பி உதயகுமார்.

நாங்கள் செய்யும் பணிகளில் கடுகளவும் உள்நோக்கம் இல்லை – ஆர்.பி.உதயகுமார்

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் தேவைகளை ஆளுங்கட்சியிடம் எடுத்துச் சொல்வதே எதிர்கட்சியின் கடமை. அதன் அடிப்படையில்தான் மனுக்களை கொடுத்து வருகிறோம். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நாங்கள் செய்யும் எந்த நடவடிக்கையிலும் கடுகளவும் உள்நோக்கம் இல்லை. அரசு மேற்கொள்ளும் திட்டங்களை வரவேற்க ஒரு போதும் தயங்கியதில்லை. எனது ஜனநாயக கடமையின் அடிப்படையிலேயே கோரிக்கைகளை முன்வைத்து வருகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் செய்து வரும் இந்த பணியின் மூலம் யாரையும் காயப்படுத்தவோ அல்லது குறைந்த மதிப்பிடவோ இல்லை. மதுரையில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கிராம பகுதிகளுக்கான கொரோனாவை தடுப்பதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமான மக்கள் குவிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி குறித்து மக்களுக்கு முழுமையான அறிவிப்பை வெளியிட்டால் மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் தெரிவித்தார்.