டவ்தே புயலால் நடுக்கடலில் மாயமான 16 மீனவர்கள்… மீட்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

 

டவ்தே புயலால் நடுக்கடலில் மாயமான 16 மீனவர்கள்… மீட்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆரோக்கிய ராபி, மகேந்திரன், கொட்டில்பாடைச் சேர்ந்த சகாய ஆன்றனி, அலெக்ஸாண்டர், ஆன்றனி, கடியப்பட்டினத்தை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 பேர் கேரளாவில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர். கோழிக்கோட்டை சேர்ந்த சதீஷ் என்பவரின் `அஜிமிர்சா’ என்ற விசைப்படகில் கடந்த மே 5ஆம் தேதி பெய்ப்பூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றனர்.

டவ்தே புயலால் நடுக்கடலில் மாயமான 16 மீனவர்கள்… மீட்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

ஆழ்கடலில் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கும் இவர்கள், அரபிக் கடலில் ‘டவ் தே’ புயல் எச்சரிக்கை வழங்கப்பட்டபோது எவ்வித தொடர்புமின்றி இருந்தனர். புயல் எச்சரிக்கை தகவல் கிடைக்கப் பெற்ற பிற மீனவர்கள் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில மீன்பிடித் துறைமுகங்களில் கரைசேர்ந்தனர். ஆனால், இந்த 16 மீனவர்களும் இதுவரை கரைசேரவில்லை. இவர்கள் புயலில் சிக்கினார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், “தமிழகத்தின் 12 மீனவர்களும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர். அவர்கள் காணாமல் போனது குறித்து ஏற்கெனவே கொச்சி கடற்கரை காவல்படையினரிடம் தகவல் தெரிவித்தோம். அவர்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். ஆகையால் மீனவர்களைக் கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.