திருப்பூரில் ஆக்ஸிஜன் இல்லாததால் இருவர் உயிரிழப்பு! மருத்துவமனையை நம்பி சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூர மரணங்கள் – ஸ்டாலின்

 

திருப்பூரில் ஆக்ஸிஜன் இல்லாததால் இருவர் உயிரிழப்பு! மருத்துவமனையை நம்பி சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூர மரணங்கள் – ஸ்டாலின்

திருப்பூரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியன் இலட்சணம் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவது தடைப்பட்டு 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை நேர்ந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், மின்தடை நேர்ந்தது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் வள்ளி தெரிவித்தார்.

இதுகுறித்த செய்தியை ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை @CMOTamilNadu ஆட்சியின் இலட்சணம் இது! கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.