தெலங்கானாவை போல 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

 

தெலங்கானாவை போல 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு தேர்வு நடத்துவது நோய் தொற்றை அதிகரிக்கும் என இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

 

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலங்கானா முதல்வர் காட்டும் வழியையாவது தமிழக முதல்வர் பழனிசாமி பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.