மக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு! சென்னையில் சமூகப் பரவலா? என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்

 

மக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு! சென்னையில் சமூகப் பரவலா? என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியுள்ள இடம் சென்னை தான். அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய சென்னையின் முக்கியமான இடங்களில் அதிகமாக பரவியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் வாரியாக படுக்கைகள் வெண்டிலேட்டர்கள்’ எண்ணிக்கையையும், கொரோனா நோயால் இறந்தோரின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநிலக் கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும்”

“50 சதவீதம் கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்து விட்டனர்” என்று ‘தினகரன்’ நாளிதழில் இன்று வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. “ஜூன் 4-ம் தேதிவரை 398 பேர் சென்னையில் கொரோனா தொற்று நோய்க்கு இறந்திருப்பதாக உளவுத்துறை தெரிவிப்பதாகவும்”; “அரசின் சார்பில் வெளியிடப்படும் கணக்கு 167 மட்டுமே என்றும்” வெளிவந்திருக்கும் அந்தப் பேரிடியான செய்தி, கொரோனா நோய் பெருந்தொற்றின் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.

மக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு! சென்னையில் சமூகப் பரவலா? என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்

கொரோனாவைக் கையாளுவதில், ‘குழப்பம்’ எனும் கழிவைக் கொட்டி அதன்மேல் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ‘விபரீதமான’ நிர்வாகத் திறமையின்மை, வெளிச்சம் போட்டு நிற்கிறது. இறப்பு எண்ணிக்கையைக் கூட இதயமற்ற முறையில் இருட்டடிப்பு செய்யும் அ.தி.மு.க. அரசின் செயல், ‘கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைத்தான் எனக்கு நினைவு படுத்துகிறது. ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்’ அரசின் நடவடிக்கை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் உயிரைப் பறிக்கும் மிக முக்கிய காரணியாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் மரணங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது. “அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இருக்கின்றன; இந்தியாவிலேயே அதிக வெண்டிலேட்டர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு” என்றெல்லாம் முதலமைச்சர், மார்தட்டிப் பேசி வருகின்ற சூழலில் – ஏன் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்கள்? அப்படி வீட்டிற்குச் சென்றவர்களில் – திடீர் மூச்சுத்திணறல் என்று மருத்துவமனைக்குத் திரும்பி வந்தோருள் எத்தனை பேரின் உயிர் போயிருக்கிறது? இதற்கெல்லாம் அரசிடம் போதிய புள்ளிவிவரங்கள் உண்டா?

“அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு, ஐந்து தினங்கள் அங்கே இருந்து, இறந்தால் மட்டுமே கொரோனா மரணக் கணக்காகக் காட்டப்படுகிறது” என்பது எவ்வளவு அபத்தம் – அபாயகரமான அணுகுமுறை?

மக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு! சென்னையில் சமூகப் பரவலா? என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில், தினமும் கொரோனாவிற்காக அனுமதிக்கப்படுவோர் எத்தனை பேர்? இந்த மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எத்தனை? நோயால் பாதிக்கப்பட்ட எத்தனைப் பேர் வெண்டிலேட்டரில் இருக்கிறார்கள்? கொரோனா நோயால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? என்பது போன்ற தகவல்கள் ‘கொரோனா மாநில கட்டுப்பாட்டு அறை’ செய்தி அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை. தலைநகர் சென்னையில் ‘கொரோனா’ கோரத் தாண்டவமாடும் நேரத்தில் கூட, வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மனசாட்சி இந்த அரசுக்கு எள்ளளவும் இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் இறப்போர் எண்ணிக்கை பற்றியும் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. ‘கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்று’ ‘கணக்கில் வராத மரணங்கள்’ என்ற ஆபத்தில் சென்னை மாநகர மக்கள் அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநகரத்தில் மட்டும், 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்ட கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. அரசின் நிர்வாகமே தற்போது “வெண்டிலேட்டரில்” இருக்கிறது!

சென்னை மாநகர கொரோனா நோய்த் தொற்றைக் கையாளுவதில் எத்தனை குழப்பங்கள்?

‘கோயம்பேடு மார்கெட்’ வேண்டுமா – வேண்டாமா என்பதை முடிவு செய்ய அ.தி.மு.க. அரசுக்கு ஒரு மாதம்!

‘சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா – இல்லையா’ என்பதை அறிவிக்க இன்றுவரை தயக்கம், தடுமாற்றம்!

மண்டலம் மண்டலமாக, கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்ட பிறகும், ஏன் இந்தத் தயக்கம்?

சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் பதில் – ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு! பிறகு ‘சிறப்பு அதிகாரி’ என்று திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் – நியமனம். அடுத்து ‘ஐந்து அமைச்சர்கள் அடங்கிய’ குழு! இப்போது சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கப் புதிதாக ஒரு திரு. பங்கஜ் குமார் பன்ஸால் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ‘சிறப்பு ஒருங்கிணைப்பாளராக’ நியமனம்! ஒரு மாநகராட்சியை நிர்வாகம் செய்ய முடியாமல், இந்த முதலமைச்சர் தவியாய்த் தவிப்பதை வேடிக்கை என்பதா – வேதனை என்பதா என்றே புரியவில்லை!

இவ்வளவு குழப்பங்கள் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மட்டுமல்ல – உள்ளாட்சித்துறை நிர்வாக சீர்கேட்டிற்கே முழுமுதல் காரணமான திரு. எஸ்.பி.வேலுமணியை ஏன் இன்னும் பொறுப்பில் நீடிக்க விட்டிருக்கிறார் முதலமைச்சர்? தனக்கு ஆற்றிவரும் திரை மறைவு சகாயத்தை வெளியில் சொல்லி விடுவார் என்பதற்காகவா?

158 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு – ஒருவர் மட்டுமே இறந்துள்ள கோவை மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் திரு. ராஜாமணி, “கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் இப்போது அதிகமாக இருக்கிறது” என்று நேற்றைய தினம் வெளிப்படையாகப் பேட்டியளித்திருக்கிறார். இந்த நோயின் வீரியம் அதிகமாகி விட்டது என்று ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே அறிவிக்கிறார். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ, “கொரோனா வீரியம் அதிகரித்திருப்பது” குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்?

அதிலும் குறிப்பாக, ஜூன் 6-ம் தேதிவரை, 20993 பேர் பாதிக்கப்பட்டு – 197 பேர் இறந்துள்ள நிலையில், ஏன் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி இந்த நிலைமையை மறைத்து வருகிறார்?

ஆகவே, “கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில்”, முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது என்பதைப் பாமரரும் அறிவர்.

மக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு! சென்னையில் சமூகப் பரவலா? என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்

அதனால் இன்றைக்குச் சென்னை மாநகர மக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் ஆடிப் போயிருக்கிறார்கள். அது போதாது என்று மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையை, சரி பாதியாகக் குறைத்து வெளியிட்டு – மிகப்பெரிய துரோகத்தை – மன்னிக்க முடியாத குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்கள் கேட்டிருப்பது போல் “சென்னை மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் வாரியாக படுக்கைகள் வெண்டிலேட்டர்கள்” எண்ணிக்கையையும், கொரோனா நோயால் இறந்தோரின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநிலக் கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும் என்றும்; எத்தனை ‘கேஸ் ஷீட்டுகளில்’ முதலில் ‘கொரோனா’ என்று எழுதிவிட்டு, பிறகு ‘சிவப்பு மை’ போட்டு மறைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாநகர மக்களின் உயிரோடு, ஆபத்தான விளையாட்டு நடத்துவதைக் கைவிட்டு – மாநகரில் ‘சமூகப் பரவல்’ வந்து விட்டதா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து – பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றுப் பதற்றத்திலிருந்து மக்களைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.