சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்: ஸ்டாலின்

 

சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்: ஸ்டாலின்

செயலாளரை மாற்றியதுபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என்றும், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரிகள் மாற்றம், அரசின் முன்னுக்குபின் முரணான நடவடிக்கைகள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு துறைகள் வெளியிடும் கொரோனா புள்ளிவிவரங்களில் முரண்பாடு இருப்பது ஏன்? சுகாதாரத்துறையில் அமைச்சர்கள்- அதிகாரிகள் இடையே போட்டியினால் இந்த குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா?

சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்: ஸ்டாலின்

குழுக்களாக வெவ்வேறு திசை நோக்கி செயல்படும் அரசியல்-அதிகாரப் போட்டிக்கும், ஊழல்களுக்கும் அப்பாவி மக்களின் உயிரை கொரோனாவுக்கு பலிகடா ஆக்குவதா?

நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு எத்தனை நோயாளிகள், பரிசோதனைகள், மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும்.

சுகாதாரத்துறை செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு. இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில் அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கு காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத்துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.