நெல்லையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 103 பேரின் இறப்புகள் மறைக்கப்பட்டுள்ளன: ஸ்டாலின்

 

நெல்லையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 103 பேரின் இறப்புகள் மறைக்கப்பட்டுள்ளன: ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாகவும் அதனையும் தமிழக அரசு மறைப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஆனால் அதற்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல என்றும் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்கள் அரசின் கணக்கில் சேர்க்கப்படாதது அம்பலமான செய்தியை பகிர்ந்தார். அத்துடன், “#COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்:103! சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்! உயிரோடு விளையாட வேண்டாம்! @CMOTamilNadu உண்மை வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.