பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை;நாற்காலி பற்றிய பயம்தான் இருக்கு – ஸ்டாலின்

 

பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை;நாற்காலி பற்றிய பயம்தான் இருக்கு – ஸ்டாலின்

சிவகங்கையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தின் தமிழர்களின் பெருமையாக பார்க்கக்கூடிய கீழடி சிவகங்கை மாவட்டத்தில்தான் இருக்கிறது. சங்க கால பெருமையை பேசுகிறோம் எனில் அவையெல்லாம் உண்மை என நிரூபிக்ககூடியது கீழடி, தமிழர்களின் நாகரீகமும், பண்பாடும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரம் உள்ள மண் கீழடி. கீழடி அகழாய்வு மூலம் தமிழர்கள் பெருமை அடையக் கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. கீழடியை மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆய்வு செய்தார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு, அமர்நாத்தை பணியிடமாற்றம் செய்து, கீழடி பெருமையை மறைக்க முயற்சித்தது.

போராட்டம், வழக்கு என மக்கள் கிளர்ச்சிக்கு பின் தற்போது மாநில அரசு அகழாய்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் தான் உலக அங்கீகாரம் கிடைக்கும். தமிழரின் பெருமை வெளிவரக்கூடாது, உலகம் அறியக்கூடாது என நினைக்கும் பாஜக அரசுக்கு தமிழர்களின் வாக்கு மட்டும் வேண்டுமா? இது ஒரு அரை அதிமுக, அரை பாஜக ஆட்சி. பாஜகவை எதிர்க்கும் வல்லமை, மத்திய அரசிடம் வாதிட்டு தமிழகத்தின் உரிமையை மீட்கும் வல்லமை அதிமுக அரசுக்கு இல்லை.

பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை;நாற்காலி பற்றிய பயம்தான் இருக்கு – ஸ்டாலின்

மாநில அரசின் உரிமையை பறிக்கும் பாஜகவை அதிமுகவினர் எதிர்க்கவில்லை. மத்திய அரசிடமிருந்து இயற்கை பேரிடர், ஜிஎஸ்டி வரி வசூலை மாநில அரசு வாதிட்டு பெறவில்லை. இந்தி திணிப்பை தடுக்க முன்வரவில்லை. முதலமைச்சருக்கு வெட்கம் இல்லையா? வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வாழ்க்கை பாதிக்கும் என தெரிந்தும் முதலமைச்சர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் புரோக்கர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விவசாயி என போலி வேஷம் போட்டுவருகிறார். அவருக்கு சுத்தமாக அறிவே இல்லை. சிந்திக்கக்கூடிய திறன் இல்லை.

2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என பக்கம் பக்கமா விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் அதற்காக புதிதாக மருத்துவர்களையோ, செவிலியர்களையோ நியமிக்கவில்லை. சொந்த கட்சியினருடைய மரியாதையை கூட பழனிசாமி இழந்துவிட்டார். நீட் தேர்வு, விவசாயிகள், 7 பேர் விடுதலை என தொடர்ந்து பல்வேறு அனைத்திலும் நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர் ஆளுங்கட்சியினர். பழனிசாமிக்கு மக்களை பற்றிய கவலை இல்லை; எதிர்கால கனவும் சுத்தமாக இல்லை. அவருடைய நாற்காலியை பற்றியே எந்நேரமும் கவலையில் இருக்கிறார் பழனிசாமி” எனக் கூறினார்.