தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்?- ஸ்டாலின்

 

தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்?- ஸ்டாலின்

மதுரை மேலூரில் திமுக சார்பில் “தமிழகம் மீட்போம்” என்ற பெயரில் 2021ம் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை பொதுக்கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 550 கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை மண், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நக்கீரன் உள்ளிட்ட பல தமிழ் புலவர்கள் வாழ்ந்த மண் தான் இந்த மதுரை மண்… வில்லில் இருந்து புறப்படும் அம்பு எவ்வளவு கூர்மையானதோ அதேபோல் இங்குள்ள நிர்வாகிகள் சிலர் செயல்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் திமுகதான் தமிழகத்தை ஆளும் என தேவர் தெரிவித்திருந்தார். பசும்பொன்னில் தேவர் நினைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில், தேவரை போற்றும் வகையில் பல மண்டப திட்ட பணிகளை மேற்கொண்டவர் கருணாநிதி தான். தமிழ் மக்களின் ஆட்சியாக திமுக இருந்து வருகின்றது. தற்போது நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி என சொல்ல முடியாது, இது 30 பேர் கொண்ட கும்பல் ஆட்சி.

தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்?- ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றும் அரசு என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு எடுத்துக்காட்டு. மதுரை எய்ம்ஸ் அமைக்க படம் எடுத்தார்களே தவிர இன்னும் கட்டுமானப் பணியை தொடங்கவில்லை. தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்?. திமுக மதுரைக்காக மதுரை உயர்நீதிமன்ற கிளை, உள்பட பல பாலங்கள், மருதுபாண்டியர் சிலை, போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மதுரையைச் சுற்றி ரிங்ரோடு, மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், அதன் அருகே ஒருகினைந்த வேளாண் வணிக வளாகம், சர்வதேச விமான நிலையம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக தான். சிட்னி, ரோம் நகர் போன்று மதுரையை செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் மாற்ற வேண்டாம், அதனை மேலும் கெடுக்காமல் இருந்தால் போதும். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் கோபுரம் ஏற ஆசைப்படுவது போல அமைச்சர்கள் இருவரும் செயல்பட்டு கொண்டிங்கின்றனர். அமைச்சர் உதயகுமார் போன்று பல அமைச்சர்களும் அவர்களின் துறைகளும் ஊழலால் திழைத்துள்ளது.