காவிரியில் தண்ணீர் திறக்கும்போதுதான் தூர்வார உத்தரவிடுவீர்களா? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

 

காவிரியில் தண்ணீர் திறக்கும்போதுதான் தூர்வார உத்தரவிடுவீர்களா? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

காவிரியில் தண்ணீர் திறக்க 18 நாட்களே உள்ள நிலையில், 7 டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதி வரை தூர்வாரிவிடுவீர்களா என்று சம்பந்தப்பட்ட துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறக்கும்போதுதான் தூர்வார உத்தரவிடுவீர்களா? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாக திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பின்னர் தூர் வாரும் பணிகளை ஆளும் அரசு அறிவித்துள்ளது. அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்தும், பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் இதுகுறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் உள்ளார்.


இந்நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து, அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அலுவலர்களையும் நியமித்துள்ளனர். அணை திறக்க இன்னும் 18 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி விடுவார்களா? மேட்டூரில் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறக்கும்போதுதான் தூர்வார உத்தரவிடுவீர்களா? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி
துறை அமைச்சரின் அலட்சியத்தால் அணையிலிருந்து வரும் காவிரி நீர் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது பதில் தெரியாத புதிராகவே உள்ளது. ஆகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வழக்கம் போல அலுவலர்களை நியமித்து அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்றுத் தூர்வாரும் பணிகள் அமோகமாக நடைபெற்றுவிட்டது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கி கணக்குக் காட்ட முயற்சிக்காமல், விவசாய சங்க பிரதிநிதிகளையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்யவேண்டும். கால்வாய் தூர்வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமளிக்காமல், வெளிப்படையாக விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கும் உதவ விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”