சமூக நீதிக்கு மட்டுமல்ல சட்ட நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது: முக ஸ்டாலின்

 

சமூக நீதிக்கு மட்டுமல்ல சட்ட நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது: முக ஸ்டாலின்

மேல்முறையீட்டு விசாரணை கால அளவு, வழக்கு மற்றும் பயணத்திற்கு ஆகும் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உச்சநீதி மன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். இது தென் மாநிலங்கள் பயன்பெற உதவும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சட்டத்துறை சார்பில் சட்ட கருத்தரங்கம் மற்றும் 2 ஆவது மாநில மாநாடு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்களுக்கு பயன்படும் வகையில் “தேர்தல் சம்மந்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய கையேடு” திமுக தலைவர் முக ஸ்டாலினால் வெளியிடப்பட்டது.

சமூக நீதிக்கு மட்டுமல்ல சட்ட நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது: முக ஸ்டாலின்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், “வாசல் இல்லாமல் வீடோ, வக்கீல்கள் இல்லாமல் கட்சியோ நடத்த முடியாது. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர். அவர் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர்களால் நிறைந்தது நீதிக்கட்சி. அதே போல் தான் திமுகவும். ஆர்எஸ் பாரதிக்கு பிறகு சட்டத்துறை முழுமையடைந்தது என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உருவாகக் காரணம் இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள். ஏராளமான நீதிபதிகளையும் உருவாக்கிய இயக்கம் திமுக. கழகத்திற்கு துணிச்சலை உருவாக்கும் அணி வழக்கறிஞர் அணி, அண்ணாவின் அருகில் மெரினாவில் புதைக்கப்பட வேண்டும் என்ற கலைஞரின் ஆசையை நிறைவேற்றியது வழக்கறிஞர் அணி. என் உயிருள்ளவரை இதை மறக்க மாட்டேன். அதிமுகவிற்கு அச்சூழலில் சம்மட்டி அடி கொடுத்தது அந்த அணி. அரசின் எதிர்ப்பை மீறி மெரினாவில் உடலை அடக்கம் செய்யலாம் என்று தான் நினைத்தேன். சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமே , தொண்டர்களுக்கு என்ன ஆகும் என்றெல்லாம் கலங்கி நின்றேன். வழக்கு தாக்கல் செய்யலாமா என்று கேட்டார் வில்சன். சரி என்றேன். 12 மணி நேரத்தில் உத்தரவை பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தார்.

1991- 96 தமிழகத்தின் இருண்ட காலம். அரசின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சொந்த உழைப்பில் நிற்பவர்கள் நாங்கள். அடுத்தவர் உழைப்பில் நிற்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். கண்கொத்திப் பாம்பாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை கவனித்தவர்கள் நமது வழக்கறிஞர்கள். 18 ஆண்டு கால சட்டப் போராட்டம் நடத்தி ஜெ. காரிலிருந்த தேசியக் கொடியை கழற்றியது வழக்கறிஞர் அணி. என் தங்கை கனிமொழி 2 ஜி பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். 2 ஜி ஐ நோ ஜி ஆக்கியது நம் சட்டத்துறை. சமச்சீர்கல்வியை சட்டமாக்கியது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த காரணமாகியது, அண்ணா நூற்றாண்டு நூலக பிரச்சனை, குரூப் 1 தேர்வு முறைகேடுகளை கண்டறிந்து வழக்கு போட்டது என சட்டத்துறையின் சாதனைகள் பட்டியலில் அடங்கா.

நெடுஞ்சாலைத்துறையில் 6000 கோடி ஊழல் என வழக்கு போட்டதன் பேரில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடக் காரணமானது திமுக சட்டத்துறை. மத்திய மாநில அரசுகளின் அராஜகங்களை நாம் சந்தித்தாக வேண்டும். வேலை உங்களுக்கு அதிகமாகியுள்ளது. அமெரிக்காவின் நிலை உங்களுக்கு தெரியும்.மக்கள், வாக்களித்தவர்களுக்கு மரியாதை இல்லை. நீதியை நிலைநாட்ட நீங்கள் போராடி ஆக வேண்டும்” எனக் கூறினார்.