சென்னை: உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக 39 இடங்களில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. மக்களுக்கு அதிமுக மீதான அதிருப்தி ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அனல் பறக்கும் பிரசாரமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். திமுக பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியவர் முக ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவரது பிரச்சாரத்தை திமுக தொண்டர்கள் பலரும் பாராட்டினர்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கேட்டு கொண்டதாக சில நாட்களாக இளையதளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் உதயநிதி சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்திலோ, 'இன்னும் காலம் இருக்கு. இப்பவே பதவிய கொடுத்தா விமர்சனங்கள் அதிகமா வரும்’ என்று தலைவர் யோசிக்கிறார். அதனால் இப்போதைக்கு உதயநிதிக்கு பதவி கிடைக்குறது சந்தேகம் தான்' என்று பேசப்படுகிறது.

திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டர் கூட உயர் பதவிக்கு வர முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். அப்படி இருக்க உதயநிதி ஸ்டாலின் அரசியல், கட்சி, குடும்பம் இவற்றையெல்லாம் தாண்டி எப்படி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.