“கருணையுள்ளத்துடன் உதவிடும் உன்னதத் திருவிழா” – மு.க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

 

“கருணையுள்ளத்துடன் உதவிடும் உன்னதத் திருவிழா” – மு.க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,” கிறிஸ்துவ சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ஏழை- எளிய மக்களுக்கு கருணையுள்ளத்துடன் உதவிடும் ஒரு மிக முக்கியமான உன்னதத் திருவிழா – இனிய திருவிழா!

“கருணையுள்ளத்துடன் உதவிடும் உன்னதத் திருவிழா” – மு.க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

ஏழைகளுக்கும் – அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் (25.12.2020) ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத – அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை – இந்தத் தினத்தில் எங்கும் மிளிர்வதை நாம் எப்போதும் காண்கிறோம். தமிழ் செம்மொழிக்கும் – தமிழ்நாட்டின் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரைக்கும் – ஏன், கிராமங்கள் முதல் மாநகரம் வரை மிகச்சிறந்த சுகாதாரத் தேவைகளுக்கும் உரிய உட்கட்டமைப்புகளை உருவாக்கி – இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்றோரும் சான்றோரும் ஆற்றிய – இன்னும் ஆற்றி வருகின்ற அரும்பணிகள் போற்றத்தக்கது – அனைவராலும் பாராட்டத்தக்கது.

“கருணையுள்ளத்துடன் உதவிடும் உன்னதத் திருவிழா” – மு.க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், கிறிஸ்துவ சமுதாயப் பெருமக்களின் கல்விக்கும் – அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும் – ஆக்கபூர்வமான திட்டங்களையும் நிறைவேற்றி அக்கறையுடன் அரவணைத்துச் சென்றிருக்கிறார். “மாநிலச் சிறுபான்மையினர் நல ஆணையம்”, “சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” போன்றவற்றை உருவாக்கி – பல நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார்.

கிறிஸ்துவப் பெருமக்களுக்குச் சோதனை வந்த காலங்களில் – அவர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட கட்டங்களில், மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாத்திடப் பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காலங்களில் இருந்து இன்றுவரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த உரிமைக் குரல் சிறிதும் ஓயாமல் என்றைக்கும் தொடரும். தொடர்ந்து இன்னும் பல சாதனைத் திட்டங்களை, கிறிஸ்துவ சமுதாய மக்களின் நலனுக்காக – சீரிய முன்னேற்றத்திற்காக ஆற்றிட இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டிற்கு விடியலை ஏற்படுத்தி, சாதனை புரிவோம்!


மகிழ்ச்சிக்குரிய இந்தப் பெருவிழாவினை, கொரோனா கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் கொண்டாடிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் – எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவரும் வாழ்வில் நலமும் வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.