கந்த சஷ்டி விவகாரம்: தமிழக அரசை பாராட்டிய ரஜினிகாந்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி

 

கந்த சஷ்டி விவகாரம்: தமிழக அரசை பாராட்டிய ரஜினிகாந்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி

’கருப்பர் கூட்டம்’ எனும் யூடியூப் சேனல் கந்தசஷ்டி கவசம் பாடல்களைப் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, வெளியிட்டிருந்தார்கள். அதில் உள்ள பல பகுதிகள் முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சி காவல் துறையில் புகார் அளித்தது. இதையடுத்து கருப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த சேனலின் அலுவலகமும் காவல் துறையால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கருப்பர் கூட்டம் சேனலில் அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளைக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்”எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “கந்த சஷ்டி விவகாரத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.