பேரிடரில் சிக்கித்தவிக்கும் நீலகிரி! களத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

 

பேரிடரில் சிக்கித்தவிக்கும் நீலகிரி! களத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை இன்று நேரில் பார்வையிட்ட அமைச்சர் வேலுமணி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கபட்டு முகாம்களில் தங்கியுள்ள பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரண உதவிகளை வழங்கினர். புத்தூர் வயல், அத்திப்பாளி முகாம்களில் தங்கி உள்ள 230க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கபட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி, உதகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடன் உதகை, கூடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் மரம் விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.