“முதல்வர் வேட்பாளர் குறித்து எல்.முருகன் இப்படி சொல்வது சரியல்ல” அமைச்சர் செல்லூர் ராஜூ

 

“முதல்வர் வேட்பாளர் குறித்து எல்.முருகன் இப்படி சொல்வது சரியல்ல” அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பது அசைக்க முடியாத கருத்து. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்வரை தமிழக பாஜக தலைவர் எல் முருகன், நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் ஏன் தற்போது இவ்வாறான கருத்தை தெரிவித்தார் என்பது தெரியவில்லை.

“முதல்வர் வேட்பாளர் குறித்து எல்.முருகன் இப்படி சொல்வது சரியல்ல” அமைச்சர் செல்லூர் ராஜூ

அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் என்று சொல்வது அதிமுகவிற்கு பெருமை. யாரும் காங்கிரஸ் ஆட்சியை தருவோம், கலைஞர் ஆட்சியை தருவோம் என சொல்வதில்லை. திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செய்யாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தான் அறிவிக்கும் திட்டத்தை அதிமுக செயல்படுத்தி வருவதாக சொல்வது ஏற்புடையதல்ல. முதல்வர் மேற்கொள்ளவுள்ள வெளியூர் பிரச்சாரத்தை முதலில் மதுரையில் தொடங்க கோரிக்கை வைக்க உள்ளோம், அரசியலில் மதுரை துவக்கமாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது” எனக் கூறினார்.