• July
    22
    Monday

Main Area

Main



பல் வலி சிகிச்சை முடிந்தவுடன் தமிழகத்தில் மழைபெய்ய ஆணையிடுவார் முதல்வர் எடப்பாடி...

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
Loading...

'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தமிழகத்தில் மழைபெய்ய ஏற்பாடு செய்வார்’என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறவில்லை. மாறாக மழை பெய்வது என்பது முதல்வர் கையில் இல்லை’ என்ற உண்மையை உரக்கக் கூறினார்.

rajendrabalaji

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, இவர்களுக்கெல்லாம் பேச்சுத்திறன் இருக்கிறதா அல்லது பிறவி ஊமைகளா என்று சந்தேகப்படும் அளவுக்கு வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள் இன்று எந்த டாபிக் குறித்துப் பேசினாலும் உலகத்தரத்துக்கு உளறிக்கொட்டுகிறார்கள்.

இந்நிலையில் அதன் ஒரு துளி தொடர்ச்சியாக, ‘பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் மழையை பொழிய வைக்க முடியாது. பருவகாலங்களில்தான் மழை பெய்யும்’ என ஒரு அரிய கருத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் களப்பணியாளர்களுக்கான குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்.ஆர்.நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

edappadi

அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்,’உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் பஞ்சாயத்து  தலைவர்கள் இல்லை. அதனால் பஞ்சாயத்து செயலாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. இவர்கள், மக்களிடம் ஓட்டுக்கேட்டு போகப்போவதில்லை. அதனால்தான் மெத்தனமாக உள்ளனர். தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய சிறந்த திட்டங்கள் அரசிடம் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைபடுத்த வேண்டிய ஊராட்சி செயலாளர்கள் மெத்தனமாக செயல்படுவதே பிரச்னைக்கு காரணம். பொறுப்பு அறிந்து ஊராட்சி செயலாளர்கள் செயல்பட வேண்டும்’ என்றார்.

பின்னர்  நிருபர்களிடம் பேசிய அவர்,’தண்ணீர் பிரச்னை காரணமாக தனியார் பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது தவறு. மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாக கூறித்தான் தனியார் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி பள்ளியை மூடப்போவதாக தனியார் பள்ளிகள் அரசை மிரட்டக் கூடாது.

மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பொழிய வைக்க முடியாது. அது  பருவகாலங்களில் தான் பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தள்ளி போயிருக்கிறது. ஜூன் 30க்கு பிறகு மழை பெய்யும் என கூறியுள்ளனர். முதல்வர் பல் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’என்றார். அப்படியே அடுத்து, பழக்கதோஷத்தில், ‘அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் மழைக்கு ஏற்பாடு செய்வார்’ என்று ராஜேந்திர பாலாஜி பேசிவிடுவாரோ என்கிற பதட்டத்தில் தலைப்பு வைக்கப்பட்டு விட்டது மன்னிக்கவும்.

 

 

2018 TopTamilNews. All rights reserved.