கூட்டணியை கூட விட்டுத் தரலாம்; கொள்கையை விட முடியாது: அமைச்சர் தடாலடி!

 

கூட்டணியை கூட விட்டுத் தரலாம்; கொள்கையை விட முடியாது: அமைச்சர் தடாலடி!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் கூட்டணியை கூட விட்டுத் தரலாம் என அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழி கொள்கை முறையே நாடு முழுவதும் தொடரும் என்றும் மூன்றாவது மொழியை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

கூட்டணியை கூட விட்டுத் தரலாம்; கொள்கையை விட முடியாது: அமைச்சர் தடாலடி!

இதன் காரணமாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மும்மொழி கொள்கையால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கூட்டணியை விட்டுத் தரலாம் ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது என அதிரடியாக கூறினார்.

மேலும் கூட்டணி என்பது துண்டு போன்றது என்றும் கொள்கை என்பது வேட்டி போன்றது என்றும் கூறிய அமைச்சர், அதிமுக பொங்கும் கடல் போன்றது.. அதனை எக்காலமும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.