அன்றைக்கே சொன்னோம்.. தினகரன் அதை கேட்கவில்லை : மனம் திறந்த அமைச்சர்!

 

அன்றைக்கே சொன்னோம்.. தினகரன் அதை கேட்கவில்லை : மனம் திறந்த அமைச்சர்!

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூபோட்டியிடுகிறார். அதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், இன்று கயத்தார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, கோவில்பட்டியில் தினகரனை போட்டியிடுமாறு முன்பு வேண்டுகோள் விடுத்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 18 எம்எல்ஏக்கள் உடன் அவர் ஆளுநரை பார்க்க சென்ற போது நாங்கள் தடுத்தோம். அந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினோம். அதை அவர் கேட்கவில்லை. அப்போது நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் தினகரனுக்கு இந்த அவப்பெயர் வந்திருக்காது என்று கூறினார்.

அன்றைக்கே சொன்னோம்.. தினகரன் அதை கேட்கவில்லை : மனம் திறந்த அமைச்சர்!

தொடர்ந்து பேசிய அவர், தினகரன் மட்டுமல்ல ஸ்டாலின் கூட கோவில்பட்டியில் போட்டியிடட்டும். நான் பயப்பட மாட்டேன். நான் இந்த தொகுதி மக்களுக்காக செய்ததை மக்கள் அறிவர். அவர்களை நம்பி நான் களமிறங்குகிறேன். யார் ஜெயிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

இதையடுத்து சசிகலாவின் ஆன்மீக பயணம் குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சசிகலா பாவம். நான்காண்டுகள் சிறை தண்டனை முடித்து மன அமைதிக்காக கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். திமுக வரக்கூடாது என்றுதான் சசிகலா சொன்னாரே ஒழிய, இரட்டை இலைக்கு ஓட்டு போடக்கூடாது என்று அவர் சொல்லவில்லை. அவர் செல்லும் இடத்தில் எல்லாம் வாக்குகளை சேகரிக்க கூட்டத்தை திரட்டுகிறார்கள். அவரது அறிக்கை இரட்டை இலைக்கு வாக்களிக்க சொன்னதையே உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.