திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்புக்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது. 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

செயற்குழுவில் ஏழாம் தேதியே முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறியிருக்கிறார்கள். அதன்படி நாளை அறிவிப்பார்கள். எங்களுக்கும் உங்களைப் போன்று முடிவு என்னவென்று நாளை அறிவித்த பின்பு தான் தெரியவரும்.

OTT என்பது மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது. நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும், திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும். மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்த அரசு அவர்களுக்கு உதவும்” எனக் கூறினார்.