சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியின் நலன் கருதியே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் எதுவும் நடக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தை விட, அதிமுக ஆட்சி காலத்தில் அதிகப்படியான மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வரும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்.” எனக் கூறினார்.