சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்!

 

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை பாரிமுனையில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மீட்டு அமைச்சர் ஜெயக்குமார் முதலுதவி அளித்து
ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை, இந்தியன் வங்கி சிக்னல் அருகில் ராயபுரம் மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக், வாலிபர் மீது அசுர வேகத்தில் மோதியது. இதில் பைக்கில் வந்த ராயபுரம் ஏகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் சாலையில் நிலைக்குப்புற விழுந்தார். எதிரில் பைக் ஓட்டி வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜித் என்பவரும் கீழே விழுந்தார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் வினோத்குமாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு சாலையில் விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காரில் சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கிய இளைஞர் வினோத்குமார் சாலையில் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்தார். உடனே தனது காரை நிறுத்திய அமைச்சர் ஜெயக்குமார் காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் பைக்குடன் விழுந்து கிடந்த வினோத்குமாரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார். பிறகு முதலுதவி அளித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். காயமடைந்தவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தார். இந்த விபத்து தொடர்பாக யானைக்கவுனி போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.