மிரட்டல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு… போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் தொடரும்! – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

 

மிரட்டல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு… போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் தொடரும்! – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

சுமூகத் தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் இல்லங்களுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவு திரும்பப் பெறப்படுவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்கள் மீது போலீசார் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும் அதனால் போலீசார் இல்லங்களுக்கு பால் விநியோகம் செய்வது இல்லை என் பால் முகவர்கள் சங்கம் அறிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

மிரட்டல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு… போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் தொடரும்! – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பேரிடர் காலமான தற்போது தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பிலிருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதால் அது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கும், காவல்துறை தலைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்கிற முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு அதற்கான அறிவிப்பை நேற்று காலை வெளியிட்டிருந்தோம்.
அந்த அறிவிப்பை பார்த்து ஒருபுறம் ஆதரவும் சில இந்து அமைப்புகள் என்கிற பெயரில் மறுபுறம் மிரட்டலும் என எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. காவல்துறையினர் ஒரு சிலர் செய்கின்ற தவறுக்கு ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள், உங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை முன் வைத்தனர். நானும் எங்களது சங்கத்தின் நிர்வாகிகளோடு கலந்து பேசி நல்லதொரு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பால் நிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர்.

மிரட்டல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு… போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் தொடரும்! – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு
மேலும் காவல்துறை தரப்பில் இருந்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பேசிய நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களது நூதன போராட்டம் குறித்தும், பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் பேசி பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்போம் என்றார்.
அதன் பிறகு அவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் காவல்துறையினரால் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசியதின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் பேசியவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படும் என்கிற உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரவு 10.00மணிக்கு மேல் எங்களது சங்க மாநில நிர்வாகிகளின் இணையதள சந்திப்பு (Zonal Meeting) நடைபெற்றது. அதில் மூத்த பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு, பத்திரிகையாளர் சங்கங்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும் எங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து நன்கறிந்து ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.