• February
    22
    Saturday

Main Area

Mainதொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்… இப்படியும் ஒரு தலைவரா..!?

பொன்மன செம்மல்
பொன்மன செம்மல்

சென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்!.காரணம் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மூன்று பிரமுகர்களும் திடீரென ஊமையாகி விட்டார்கள்.

mgr

எம்ஜிஆர் நீண்ட தூரப்பயணங்களில் வழக்கமாக உடன் வரும் நண்பர்கள்தான் அவர்கள்.கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் , பல ஆண்டுகளாக அவரோடு இரவு பகல் பாராமல் பயணித்துக்கொண்டு இருப்பவர்கள்தான். அன்றும் அவர்களை வழக்கம்போல வீட்டுக்கு அழைத்திருந்தார். எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்,சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

mgr

அப்போதுதான் எம்ஜிஆர் அறைக்குள் போய் ஒரு பணகட்டும் சிறு நகைப் பெட்டி ஒன்றுமாக எடுத்துக்கொண்டு வந்து 'வாங்க ஒரு கல்யாணத்துக்கு போகலாம்' என்று மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார்.கார் தாம்பரம் வரும் வரை எல்லோரும் சாதாரணமாக பேசிக்கொண்டுதான் வந்தார்கள். எம்ஜிஆர், திடீரென நினைத்துக் கொண்டவராக,' ஆமா,நாம யார் வீட்டுக் கல்யாணத்துக்குப் போறோம் தெரியுமா? என்று  பின் சீட்டில்  இருந்தவர்களைப் பார்த்து  கேள்வியையும்  கேட்டுவிட்டு ,பதிலையும்  அவரே சொன்னார் '............!' திருச்சி அருகில் இருக்கும் ஒரு ஊரைச்சேர்ந்த பிரமுகரின் பெயரைச்சொல்லி, அவர் வீட்டுக்கு கல்யாணத்துக்குத்தான் போய்கிட்டு இருக்கோம்' என்றார். அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த  மூவரும், அந்த விநாடி முதல் அவர்கள் மூவரும் ஊமயாகி விட்டார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,ஆனால் வார்த்தையும் வரவில்லை,மனதிலுள்ளதை தலைவரிடம் சொல்லும் தைரியமும் வரவில்லை. 

mgr

இதை உணர்ந்து கொண்ட  எம்ஜிஆர், என்ன விசயம் என்று கேட்க,மூவரும் வண்டி விழுப்புரம் போகும்வரை அந்தக் கல்யாண வீட்டுக்காரரின் மேல் அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுகிறார்கள்.

எம்ஜிஆர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கையைக் கட்டிக்கொண்டு சிந்திக்கிறார். அப்போதெல்லாம் அது சிங்கிள் ரோடு பெரும்பாலான வாகனங்கள் எல்லாம் போய்விட்டிருந்த நேரம்.அப்போதே மணி இரண்டாகிவிட்டது. சில் வண்டுகளின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அன்றைய பிரமுகர் வீட்டுக் கல்யாணத்திற்கு போகக் கூடாது என்று நண்பர்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்,சாலையின் இடதுபுறம் தூரத்தில் ஒரு இரட்டை இலை சீரியல் லைட்டுகள் எரிவது எம்.ஜிஆரின் கண்ணில் படுகிறது.

mgr

எம்ஜிஆர் காரில் ஏறிக்கொண்டு இரட்டை இலை வெளிச்சம் தெரிந்த இடத்தை நோக்கி காரை செலுத்தச் சொல்கிறார்.எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருக்கிறார்கள். கொஞ்ச தூரம் போனதும் இடது புறமாக பிரியும் ஒரு கிராமத்து சாலை பிரிகிறது. எம்ஜிஆர் அந்தச் சாலையில் காரைத் திருப்பச் சொல்கிறார்.மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் கண்கள் மட்டும் அந்த இரட்டை இலை சீரியல் செட்டையே பார்த்துக்கொண்டே இருக்கின்றன. 

நேரம் ஆக ஆக அந்த இரட்டை இலை பிரகாசமாகிக்கொண்டே வருகிறது. இப்போது சாலையின் வலதுபுறத்தில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து அந்த இரட்டை இலை மட்டுமல்ல ' வெல்கம்' என்கிற சீரியல் செட்டும் தெரிகிறது. எம்ஜிஆர் காரை அங்கே விடச்சொல்கிறார்.கார் அந்த ஊருக்குள் நுழைகிறது. தெருநாய்கள் கூட உறங்கிவிட்ட நேரம். கார் அமைதியாகப் போய் நிற்கிறது. யாரோ ஒரு எளிய அ.தி.மு.க தொண்டனின் வீடு என்று தெரிகிறது,சின்னஞ்சிறு தென்னை ஓலை பந்தல்.அங்கங்கே சுருண்டு தூங்கும் கல்யாண விருந்தினர்கள். எதிர் வீட்டு பக்கத்து வீட்டு தின்னையில் உறங்கும் சொந்தங்கள்.

எம்ஜிஆர் காரை விட்டு இறங்குகிறார்.ஒரே ஒரு கட்டில் வாசிலில் போடப்பட்டு இருக்கிறது.அதில் ஒரு ஒல்லியான இளைஞன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அவன் கையில் கட்டப்பட்டு இருக்கும் காப்பு அவன்தான் மணமகன் என்று காட்டுகிறது.எம்.ஜி.ஆர் குனிந்து அவன் கன்னத்தை தட்டுகிறார்,கண்விழித்துப் பார்த்த அவன் போட்ட ' தலைவரே' என்கிற கூச்சலில் அந்த ஊரே விழித்துக்கொள்கிறது. 

mgr

அடுத்த விநாடி எல்லா விளக்குகளும் எரிகின்றன.யாருக்கும் என்ன நடக்கிறது என்றோ என்ன செய்யவேண்டும் என்றோ புரியவில்லை.ஓரமாக அடுக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்களில் இருந்து ஒன்றை எடுத்து வந்து யாரோ போட எம்.ஜி.ஆர் அதில் அமர்ந்துகொள்கிறார்.அங்கிருந்த அனைவருக்கும் நடப்பது அத்தனையும் கனவா அல்லது நிஜமா என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் சிலர் ‘தலைவரே… என்றும் ‘எந்தெய்வமே..’ என்று பரவசத்தில் பெருங்குரலெடுத்து கத்துகிறார்கள்.

mgr

அவர்களை மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள விடுகிறார். சற்று நேரத்தில் அமைதியாகிறது அந்த இடம்.ஒருவர் மட்டும் எம்.ஜி.ஆர் அருகில் வந்து “அய்யா இப்படித் திடுதிப்புன்னு வந்திட்டிங்க..!? என்கிறார் பிரமிப்பு விலகாமல்.” முகூர்த்தம் எத்தனை மணிக்கு ?” என்கிறார் எம்.ஜி.ஆர். “ எங்க சாமியே வீட்டுக்கு வந்திருக்கு… இனி எல்லா நேரமும் முகூர்த்த நேரந்தானே “ என்கிறார் பவ்வியம் காட்டியவர்.அப்புறம் என்ன?... திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களும்,மணமக்களும் உடனடியாக குளித்து அலங்கரித்துக்கொள்ள, அப்போதே திருமணம் நடைபெற்று முடிகிறது. 

mge

தன்னை கனவிலும் எதிர்பார்க்காத ஒரு தொண்டன் வீட்டில் அழையாத விருந்தாளியாக நுழைந்து,அதிர்ச்சி விலகாத மணமக்கள் தாலிகட்டும் வரைக் காத்திருந்து,திருச்சி பிரமுகருக்குத் தர கொண்டுவந்த சங்கிலிகளை இருவருக்கும் பரிசளித்து,மணமகன் கைகளில் அந்தப் பணக்கட்டையும் தினித்துவிட்டு கிளம்பினாராம் எம்ஜிஆர்.அதனால்தான் அவர் ‘புரட்சித்தலைவர்…’ ‘பொன்மன செம்மல்!’

2018 TopTamilNews. All rights reserved.