#MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

 

#MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

மீ டூ மூலம் புகார் கூறுபவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களது பெயர்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்

சென்னை: மீ டூ மூலம் புகார் கூறுபவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களது பெயர்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி மீ டூ மூலம் கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மீ டூ மூலம் புகார் கூறுபவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களது பெயர்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே நான் விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க நானும், எனது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வெளியே பேசுவதற்காக மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும், அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சின்மயி சொல்வதை நான் நம்புகிறேன். ஏனென்றால் ஏற்கனவே என்னிடம் சில பேர் வைரமுத்துவைப் பற்றி கூறியிருக்கிறார்கள் என ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.