28 வருஷமாச்சு… வாச்சாத்தியில் அந்தக் கொடூரம் நடந்து!

 

28 வருஷமாச்சு… வாச்சாத்தியில் அந்தக் கொடூரம் நடந்து!

‘சிட்டிசன்’ படத்தில் ஒரு கிராமத்தையே காணாமல் ஆக்கப்பட்ட கதை ஏராளமனவர்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு கிராமமே சூறையாடப்பட்ட உண்மை கதையைத் தெரிந்தவர்கள் ரொம்பக் குறைவே. அந்தக் கொடூரம் நடந்து 28 ஆண்டுகளாயிற்று.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்கிராமம்தான் வாச்சாத்தி. இந்த ஊரின் பெயர் 1992 ஆம் ஆண்டுக்கு முன் அந்தச் சுற்றுவட்டாரத்தில் எல்லோருக்கும்கூடத் தெரிந்திருக்காது. சுமார் 300 குடும்பங்கள் கொண்ட வாசாத்தியில் சந்தன மரங்கள் பதுக்கியிருப்பதாக 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி வனத்துறை, காவல் துறை உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அந்த ஊரை சூழ்ந்தனர். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட தெரியாத அப்பாவி மக்கள் எல்லோரையும் பார்த்து மிரண்டனர். அதிகாரிகள் கேட்பவை பல அவர்களுக்குப் புதிதாக இருந்தன.

28 வருஷமாச்சு… வாச்சாத்தியில் அந்தக் கொடூரம் நடந்து!

அக்கிராம மக்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நம்பாத அதிகாரிகள் வீடு வீடாக ஏறி சோதனை செய்தனர். எதுவும் கிடைக்காத நிலையில் வீடுகளைச் சிதைத்தும் ஆண்களை அடித்து உதைத்தனர். 18 பெண்களை (அதில் பருவம் எய்தாத சிறுமிகளும் உண்டு) ஏரிக்கரைக்கு இழுத்துச்சென்று பாலியன் வன்கொடுமை செய்தனர். இந்தக் கொடூரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை ஜூன் 20, 21, 23 ஆகிய தேதிகளிலும் நீடித்தது. இதற்கு நீதி கிட்டைக்க வேண்டிய கிராம மக்கள் 100க்கும் அதிகமானவரகள் மீது வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பினர். இது அம்மக்களை மேலும் ஒடுக்குவதாக மட்டுமல்லாமல் அடுத்து போராட விடாமல் செய்யும் தந்திரமாகவும் சமூக செயற்பாட்டாளர்களால் பார்க்கப்பட்டது.

அதிகம் கல்வியறிவு பெறாத மக்கள் அடுத்து என்ன செய்வது, எப்படிப் போராடுவது என்பதுகூடத் தெரியாமல் புலம்பினார்கள். மனித இனமே வெட்கப்பட வேண்டிய கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் ஊருக்குள் சுதந்திரமாகச் சுற்றினார்கள். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மூலம் இந்த வன்முறைக்கு எதிராக வழக்கு தொடுத்து இடைவிடாமல் நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர்.

ஏராளமான இழுத்தடிப்புகள், பொருளாதார இழப்புகள் என எல்லாவற்றையும் கடந்து அக்கிராமத்து மக்கள் தங்களுக்கான நீதி வேண்டி தொடர்ந்து போராடி வந்தனர். அதுவும் சட்டத்துக்குட்பட்ட ஜனநாயக வழியில். அம்மக்களின் நம்பிக்கை பொய்க்க வில்லை. அந்த வன்முறை நடத்தப்பட்டு 19 ஆண்டுகள் கழித்து 267 அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். விடுதலைப் பெற்ற இந்தியாவில் இத்தனை அரசு அதிகாரிகள் வேறு வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்புச் சொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது.

குற்றவாளிகள் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும், 150 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 7- பேருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும் 1000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது. அபாராத தொகையை அந்த 18 குடும்பங்களும் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இறுதியில் ஏழை மக்களுக்கான நீதி கிடைத்தது. ஆனால், எளிதில் கிடைத்தவிட வில்லை. சட்டப்போராட்டங்களைப் போலவே அம்மகளின் வலியை உணர்ந்தவர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. அவைதான் அம்மக்களுக்கு என்றேனும் ஒருநாள் தங்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கி வந்தது.

வரலாற்றின் அழிக்கமுடியாத கறையாகிப் போன இந்த வன்முறை நடந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பதே அடுத்து இதுபோல நடத்தப்படாமல் இருக்கச் செய்யும் வழியாகும்.